உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேட்டுப்பாளையம் ---- அவிநாசி நான்கு வழிச்சாலை ஏப்ரலில் க்ளைமாக்ஸ்!: போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்ப்பு

மேட்டுப்பாளையம் ---- அவிநாசி நான்கு வழிச்சாலை ஏப்ரலில் க்ளைமாக்ஸ்!: போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்ப்பு

மேட்டுப்பாளையம்:அவிநாசி - மேட்டுப்பாளையம் வரையுள்ள இருவழிச் சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 'வரும் ஏப்., மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும்' என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னுார் வழியாக அவிநாசி வரையுள்ள சாலை, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்டது. சேலம், ஈரோடு, திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர் உட்பட பகுதிகளில் இருந்து வருவோர், அவிநாசி, அன்னுார், மேட்டுப்பாளையம் சாலை வழியாக நீலகிரி மாவட்டம் செல்கின்றனர். தவிர, உள்ளூர் மக்களும் அதிகளவில் இச்சாலையை பயன்படுத்துகின்றனர். வாகனப் போக்குவரத்து அதிகம் இருப்பதால், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலுக்கும் பஞ்சமிருக்காது. சாலையை தரம்உயர்த்தி, புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அவிநாசியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை 38 கி.மீ., வரையுள்ள இந்த சாலையை, நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தி, தமிழக அரசு அறிவித்தது. கடந்தாண்டு ஏப்., மாதம் பணிகள் துவங்கப்பட்டது. தமிழக அரசு சார்பில், ரூ.220 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கோவை கோட்ட மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரு வழிச்சாலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி செல்ல, ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும் நிலையில், நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டால், 45 நிமிடங்களுக்கு உள்ளாகவே சென்றுவிடலாம். விபத்து அபாயம் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் உட்கோட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'மேட்டுப்பாளையம் --- அவிநாசி இடையிலான சாலை பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. வரும் ஏப்., மாதத்துக்குள் பணிகள் அனைத்தும் முடிக்க திட்டமிட்டுள்ளோம். 15 சிறு பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சாலை பணிகளுக்காக சுமார் 800 மரங்கள் வெட்டப்பட்ட நிலையில் 3, 000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன' என்றார். சமூக ஆர்வலர் மனோகரன் கூறுகையில், ''கூடிய விரைவில் பணிகளை முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து அவிநாசி, மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி மாவட்டங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இருக்கக் கூடாது. நான்கு வழிச்சாலை முடிக்கப்பட்டால், போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். பணிகள் தொய்வாக நடக்கும் பகுதிகளில் கூடுதல் பணியாட்களை நியமித்து முடிக்கலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ