கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபருக்கு 14 ஆண்டுசிறை
கோவை; கஞ்சா கடத்தல் வழக்கில், ஒடிசா வாலிபருக்கு, 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், காமநாயக்கன் பாளையம் அடுத்த செங்கோடம்பாளையத்தில், கடந்த 2022, பிப்., 5 ல், போலீசார் சோதனை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்தைசேர்ந்த நீலுகுமார் பாரிக்,36, என்பவரை பிடித்து விசாரித்தனர். அவரது சாக்குபையை சோதனையிட்ட போது, 21 கிலோ கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. நீலுகுமார் பாரிக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது, கோவையிலுள்ள இன்றியமையா பொருட்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில் (இ.சி., கோர்ட்) வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசா ரணை நடத்தப்பட்டது. விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றம் சாட்டப்பட்ட நீலுகுமார் பாரிக்கிற்கு, 14 ஆண்டு சிறை, 1.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் வி.சிவகுமார் ஆஜரானார்.