செட்டில்மென்ட் பகுதியில் வசதிகளில்லை தீர்வு காணப்படுமென அதிகாரிகள் உறுதி
வால்பாறை; பழங்குடியின மக்கள் வசிக்கும் செட்டில்மென்ட் பகுதியில், அடிப்படை வசதிகள் செய்துதரப்படும் என, கிராம சபைக்கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர். வால்பாறையில், காடம்பாறை, வெள்ளிமுடி, கருமுட்டி, கீழ்பூனாஞ்சி, சங்கரன்குடி, கவர்க்கல், கல்லார், பரமன்கடவு, பாலகணாறு, சின்கோனா உள்ளிட்ட, 12 செட்டில்மென்ட்கள் உள்ளன. இதில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள வில்லோனி நெடுங்குன்றம் செட்டில்மென்ட் பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர்(பொ) குமரன், பொறியாளர் ஆறுமுகம், கவுன்சிலர் கவிதா மற்றும் வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பழங்குடியின மக்கள் கூறுகையில், 'ெசட்டில்மென்ட் பகுதியில், ரோடு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், நடைபாதை, கூடுதல் தெருவிளக்கு, குடியிருப்பு பகுதியை சுற்றிலும் மின்வேலி அமைக்க வேண்டும்,' என்றனர். செட்டில்மென்ட் மக்களின் குறைகளை கேட்டறிந்த பின் நகராட்சி அதிகாரிகள் பேசியதாவது: பழங்குடியின மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் நகராட்சி சார்பில் செய்துதரப்படும். குறிப்பாக ரோடு, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும், வனத்துறையினர் அனுமதி பெற்ற பின் செய்து தரப்படும். இது தவிர, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். பழங்குடியின மக்கள் விவசாயம் செய்ய தேவையான வசதிகள் வனத்துறை வாயிலாக செய்துதரப்படும். இவ்வாறு, பேசினார்.