உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேட்டுப்பாளையத்தில் ஆப்பரேஷன் புயல்; வெளிநபர் இருப்பிடம் சென்று சோதனை

மேட்டுப்பாளையத்தில் ஆப்பரேஷன் புயல்; வெளிநபர் இருப்பிடம் சென்று சோதனை

மேட்டுப்பாளையம்; வெளிமாவட்டங்களில் இருந்து வந்து தங்கியிருக்கும் நபர்களின் இருப்பிடங்களுக்கு சென்று, அவர்கள் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா என, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை, சிறுமுகை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான ஸ்பின்னிங் மில்கள், ஜவுளி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், பாக்கு தோப்புகள், உணவு விடுதிகள், லாட்ஜ்கள், வணிக வளாகங்கள் உள்ளன. தினமும் வெளியூர் நபர்கள் பணிக்காக இங்கு வரும் நிலையில், அவர்கள் விடுதிகள் அல்லது வீடுகள் போன்றவற்றில் கூட்டம் கூட்டமாக தங்குகின்றனர். வெளிநபர்கள் தங்கியிருக்கும் இடங்கள் அனைத்திலும், அவர்களது பின்னணி குறித்து, 'ஆப்பரேஷன் புயல்' வாயிலாக, போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., அதியமான் கூறியதாவது:- புதிதாக வரும் வெளிநபர் நடவடிக்கை குறித்து, எப்போதும் கண்காணிக்கப்படுகிறது. தற்போது பணிக்காக வந்து தங்கியுள்ளவர்களின் இருப்பிடங்களுக்கு போலீசார் சென்று தீவிர சோதனை செய்தனர். அவர்கள் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா; வழக்கின் நிலை குறித்து விசாரிக்கப்பட்டன. குற்ற பின்னணி கொண்டவர்கள் உள்ளனரா என, தொழில்நுட்பங்கள் வாயிலாக சோதனை செய்தோம். சிறுமுகை பகுதியில், ஒரு பழைய குற்றவாளி கண்டறியப்பட்டார். வெளியூர் நபர்களிடம் கைரேகைகளும் பெறப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார். கண்காணிப்பு தீவிரம் சமீபத்தில், மேட்டுப்பாளையம் பகுதியில் பழைய குற்றவாளிகள் 26 பேர் கண்டறியப்பட்டு, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களது நிலை குறித்து கேட்டறியப்பட்டது. அவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் கண்காணிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ram pollachi
ஜூலை 28, 2025 15:58

விடுதிகளில் நடந்த சமாச்சாரம் எல்லாம் வீடுகளிலும், வீட்டில் நடந்த நல்ல சுபகாரியங்கள் எல்லாம் விடுதிகளில் நடக்கிறது! திருப்பூரை விட கோவை மாவட்டம் படு மோசம்... இரவு நேரங்களில் இந்த நபர்கள் செய்யும் செயல்கள் வெளியே சொல்ல முடியாத நிலை... குடியிருப்போர் மற்றும் வீட்டின் உரிமையாளர்களும் முன்பின் பார்த்ததே கிடையாது. எல்லாம் கைபேசி வழி நடக்கிறது என்ன அருகில் நிம்மதியாக வாழ நினைப்பவர்களின் நிம்மதி கேள்விக்குறி.


சமீபத்திய செய்தி