பழனிச்சாமி இன்று அவிநாசியில் பிரச்சாரம்
அன்னுார்; அவிநாசி தொகுதிக்கு இன்று வருகை தரும் முன்னாள் முதல்வர் பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிச்சாமி தமிழகம் முழுவதும் எழுச்சி பயணம் என்கிற பெயரில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் பிரச்சா ரம் செய்து வருகிறார். இன்று அவிநாசி தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார். அவிநாசி நகரில் சேவூர் சாலையில் இன்று மாலை 6:00 மணிக்கு எழுச்சி பயண பிரச்சாரம் செய்ய உள்ளார். அவரை வரவேற்க அவிநாசி மற்றும் அன்னுார் நகரில் ஏராளமான கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளன. பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் பழனிச்சாமியை வரவேற்க கலைக்குழு, இசைக் குழு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அன்னுார், அவிநாசி ஒன்றியங்களிலிருந்து 50,000 பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அன்னுார், அவிநாசி அ.தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.