உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்; சட்டசபையில் அறிவிக்க கோரிக்கை

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்; சட்டசபையில் அறிவிக்க கோரிக்கை

கோவை; இந்த மாதம் கூடும் சட்டசபை கூட்டத் தொடரில், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக சொன்ன தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என, பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.இது குறித்து, அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியிருப்பதாவது: கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில், பகுதிநேர ஆசிரியர்களை, 100 நாளில் பணி நிரந்தரம் செய்வோம் என, முதல்வர் தேர்தல் வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதியை, பகுதிநேர ஆசிரியர்கள் நம்பி இருந்தனர். ஆனால் மூன்றரை ஆண்டுகள் முடிந்த பின்னரும், சொன்னபடி முதல்வர் பணி நிரந்தரம் செய்யவில்லை.பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால் முதல்வர் இது குறித்து, இதுவரை நேரடியாக பதில் சொல்லவில்லை என்பதால், கவலை அடைந்து வருகின்றனர்.'படிப்படியாக பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்' என திரும்ப திரும்ப ஒரே மாதிரியாக சொல்வதில், எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான அறிவிப்பை, இந்த சட்டசபை கூட்டத் தொடரிலே முதல்வர் அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ