பிளாஸ்டிக் கழிவு அகற்றம் ரோட்டோரம் சுத்தமானது தினமலர் செய்தி எதிரொலி
வால்பாறை, ; தினமலர்' செய்தி எதிரொலியாக, திறந்தவெளியில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றபட்டன.சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறையில், பிளாஸ்டிக் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருவதால், பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.வால்பாறையில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை சுற்றுலா பயணியர் வீசி செல்கின்றனர். திறந்த வெளியில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால், வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதனையடுத்து, வால்பாறை நகராட்சி கமிஷனர் ரகுராமன், சுகாதார அலுவலர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், வால்பாறை நகரில் பல்வேறு இடங்களில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை, நகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்றினர். 'தினமலர்' செய்தி எதிரொலியால், பிளாஸ்டிக் கழிவு அகற்றப்பட்டதால், இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.