பிளஸ் 2 செய்முறைத் தேர்வு துவக்கம்
- நிருபர் குழு -கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொதுத்தேர்வு எழுதும், 68,472 மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், செய்முறைத் தேர்வில் பங்கேற்றனர்.வரும் மார்ச் மற்றும் ஏப்., மாதங்களில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. பிப்., மாதம், மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.அதன்படி, நேற்று, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு துவங்கியது. இதற்கென, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 67 மையங்களும், கோவை கல்வி மாவட்டத்தில், 190 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.இயற்பியல், வேதியியல், புள்ளியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிரியல் என பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப, பள்ளிகளில் செய்முறைத் தேர்வு நடத்தப்பட்டது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:கோவை மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 1 செய்முறைத் தேர்வை, 34,516 மாணவர்களும், பிளஸ் 2 செய்முறைத் தேர்வை 33,956 மாணவர்களும் எதிர்கொள்கின்றனர். செய்முறை தேர்வை நடத்துவதற்கு ஏதுவாக முதன்மைக் கண்காணிப்பாளர், புறத்தேர்வாளர்கள், அகத்தேர்வாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அவர்கள், மாணவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் தேர்வை நடத்தி வருகின்றனர். பூர்த்தி செய்யப்படும் செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல், பாடவாரியாக தனித்தனி உறையில், முத்திரையிட்டு தலைமையாசிரியர்கள் பாதுகாப்பர்.இவ்வாறு, கூறினர். உடுமலை
உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில், நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான செய்முறைத்தேர்வு துவங்கியது.இத்தேர்வு நேற்று துவங்கி, வரும் 21ம் தேதி வரை நடக்கிறது. சுழற்சி முறையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் தேர்வு நடக்கிறது.காலை, 9:30 மணிக்கு துவங்கி, மாலை, 4:00 மணி வரை மூன்று பிரிவுகளாக செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது. பள்ளி தலைமையாசிரியர்கள், முதன்மை கண்காணிப்பாளர்களாக தேர்வுகளை கண்காணித்தனர்.