உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒதுக்குப்புறமான இடங்களிலும் போலீஸ் தீவிர ரோந்து! கல்லுாரி மாணவி பலாத்காரம் எதிரொலி

ஒதுக்குப்புறமான இடங்களிலும் போலீஸ் தீவிர ரோந்து! கல்லுாரி மாணவி பலாத்காரம் எதிரொலி

கோவை: கோவை கல்லுாரி மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தில், போலீசார் முறையாக ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தால், குற்றத்தை தடுத்திருக்கலாம் என்பதே, பொதுமக்களின் பரவலான கருத்தாக உள்ளது. ஆகவே, இனியாவது ஆளரவமற்ற பகுதிகளிலும், இரவு ரோந்து பணியில் போலீசார் முழு வீச்சில் ஈடுபட வேண்டும். குற்றங்களைத் தடுக்க, போலீசார் இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்து செல்கின்றனர். அதிக குற்றச்சம்பவங்கள் நடக்கும் இடங்களில், குற்றங்கள் நடக்காமல் தடுப்பதே இவர்களின் பணி. இவர்கள், 'பீட்' போலீசார் என அழைக்கப்படுகின்றனர். கோவை மாநகரில், 59 பீட்கள் உள்ளன. ஒரு பீட்டுக்கு இரு போலீசார் உள்ளனர். இதுதவிர, 20 'பேட்ரோல்கள்', இரு 'ஹைவே' பேட்ரோல்கள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல், ஒவ்வொரு மாவட்ட, மாநகர போலீசிலும் பேட்ரோல்கள் இயங்கி வருகின்றன. ஆனால், சமீபகாலமாக போலீசார் ரோந்து பணிகளுக்கு செல்வதற்கு தயக்கம் காட்டுவது வெளிப்படையாக தெரிந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்கு சாட்சி. போலீசார் தங்களின், உயிர், உடமைகளுக்கு சேதம் ஏற்படும் என்ற அச்சத்தால், ரோந்து பணிகளை பெயரளவுக்கே மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கல்லுாரி மாணவி பாலியல் பலாத்கார விவகாரத்திலும், குற்றம் நடந்த காலியிடத்துக்கு ரோந்து போலீசார் சென்றிருந்தால், கார் நின்றிருந்தது தெரிந்திருக்கும். இப்பகுதியில் கஞ்சா விற்பனை, மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. ரோந்து சென்றிருந்தால் போதை பொருள் விற்பனை மற்றும் குற்றத்தை தடுத்திருக்கலாம்' என்றனர். இது குறித்து, போலீஸ் உயர் அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: அனைத்து பகுதிகளிலும், ரோந்து பணிகள் முறையாக நடக்கின்றன. பீட் அலுவலர்கள், அந்தந்த பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் ரோந்து பணி மேற்கொள்கின்றனர். அவர்களை கண்காணிக்க, வாகனங்களில் ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் குறிப்பிட்ட பீட் போலீசார், இரவில் எந்தெந்த பகுதிகளில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர் என்பது தெரியும். எவ்வளவு நேரம் ரோந்து சென்றனர், குறிப்பிட்ட பகுதியில் எவ்வளவு நேரம் இருந்தனர் உள்ளிட்ட, அனைத்து விவரங்களும் தெரியும். மறுநாள் காலை இத்தகவல், சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில், போலீசார் ஏதாவது ஒரு பகுதிக்கு செல்லாமல் இருந்தால், அதுகுறித்து கேள்வி எழுப்பப்படும். தமிழகம் முழுவதும் இந்நடைமுறை பின்பற்றப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Krishnamurthy Venkatesan
நவ 05, 2025 19:58

இதன் மூலம் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் - எங்கேனும் தவறான நிகழ்வுகள், போதை கும்பலின் அட்டகாசம், ஒதுக்குபுறமான இடங்களில் ஆள் நடமாட்டங்கள் போன்றவற்றை போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் கொடுங்கள். நமக்கெதுக்கு வம்பு, வீண் வேலை என்று ஒதுங்கிவிடாதீர்கள். உங்களின் இந்த செய்கை யாரோ ஒரு அப்பாவி பெண்ணை, குழந்தையை, சிறுவர்களை காப்பாற்ற நிச்சயம் உதவும்.


KR india
நவ 05, 2025 06:20

இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் கூடுதல் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். நடு இரவில், உணவு உண்பது, செரிமான கோளாறு வரும் என்பதால், காபி அல்லது டீ மட்டும் கொடுக்கலாம். அதுவும், ரோந்து போலீசுக்கு, இலவசமாக வழங்க வேண்டும். ஒவ்வொரு பீட்-டுக்கும் இரண்டு காவலர்கள் செல்ல வேண்டும். அவர்களில் ஒருவருக்கு துப்பாக்கி வழங்க வேண்டும். கோவை சம்பவத்தில், சந்தேகத்திற்கு இடமாக, கார் நிற்பதை ரோந்து போலீஸ் பார்த்திருந்தால், அவர்களிடம் இந்த சமயத்தில், ஆள் அரவமற்ற, இந்த பகுதியில் என்ன செய்கிறீர்கள் என்று விசாரித்திருந்தால், அந்தப் பெண்ணின் கற்பு காப்பாற்றப் பட்டிருக்கும். மேலும், அந்தப் பெண்ணின் பெற்றோருக்கும், போன் செய்து, உங்கள் பெண் இரவு நேரத்தில், யாரோ ஒரு பையனுடன் வெளியே சுற்றி கொண்டிருக்கிறார் என்பதையும் காவல்துறை தெரிவித்திருக்கலாம். பெண்கள், ஆள் அரவமற்ற பகுதிக்கு செல்லக் கூடாது. இரவு 8 மணிக்கு மேல், வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது போன்ற சுய கட்டுப்பாடு, பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அவசியம். அதே போல், வெளியூருக்கு பெண்பிள்ளைகளை படிக்க அனுப்பும் பெற்றோர்கள், கல்லூரி அறை எடுத்து கொடுக்க வேண்டும். கல்லூரி விடுதியில், கட்டுப்பாடு இருக்கும். கண்காணிப்பும் இருக்கும். பாதுகாப்பும் இருக்கும். தனியே வீடு எடுத்து தங்கினால், பாதுகாப்பில்லை. மாணவ செல்வங்கள் சுய கட்டுப்பாடு இல்லாமல், தாங்கள் பாதிக்கப்பட்ட பிறகு, போலீசையும், மாநில அரசையும் மட்டும் குற்றம் சாட்டுவது சரியல்ல. எந்த அரசாக இருந்தாலும், 24 மணி நேரமும், அனைவருக்கும் காவல்துறை ரோந்து பாதுகாப்பு கொடுக்க முடியுமா ? நமக்கு நாமே பாதுகாப்பு என்ற தெளிவு வேண்டும் இரவில், நேரங்கெட்ட நேரத்தில், ஆள் அரவமற்ற பகுதியில், காருக்குள் உட்கார்ந்து காதல் பண்ணியது தவறு. பெற்றோர்கள், படிக்க அனுப்பினால், படிப்பை முடிக்க வேண்டும். படிப்பு முடிந்து, திருமண வயது வந்தவுடன், அவர்களே நல்ல வரனாக பார்த்து கட்டி வைப்பார்கள்.