உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரிப்போர்ட்டர் லீக்ஸ்

 ரிப்போர்ட்டர் லீக்ஸ்

நூறு நாள் வேலை திட்டத்துல பணிகள செய்ய தயங்குறாங்க! கோவையில் உள்ள மருத்துவமனைக்கு பஸ்சில் சென்றேன். அருகில் அமர்ந்திருந்த நண்பரிடம், 100 நாள் வேலை திட்டத்தில் பில்டிங் கட்டும் டெண்டர் எடுத்தீங்களே, வேலையெல்லாம் முடிஞ்சுதான்னு பேச ஆரம்பித்தேன். அவரோ புலம்ப ஆரம்பித்தார். என்னாச்சுனு விசாரிச்சேன். நுாறு நாள் வேலை திட்டத்துல, பல காண்ட்ரக்டர்கள் பில்டிங் வேலை எடுத்து செஞ்சோம். அதுக்கான பணம் வந்துரும்னு அதிகாரிங்க சொன்னாங்க. இப்போ வரும், அப்போ வரும்னு நாங்களும் காத்துகிட்டு இருந்தோம். ஆனா, ஒன்றரை வருஷமாகியும் இன்னும் கைக்கு பணம் வரலை. ஒவ்வொரு காண்ட்ரக்டரும், 10 முதல் 25 லட்சம் ரூபா வரைக்கும் பேமெண்ட் பெண்டிங் நிக்குது. இது கோவை மாவட்டம் முழுவதும் இப்படித்தான் இருக்குது. கவர்ன்மென்ட்டை நம்பி வெளியில கடன் வாங்கி, வேலைய செஞ்சு முடிச்சும் பில் இன்னும் ஆகல. வெளியில வாங்கின பணத்துக்கு வட்டி கட்ட முடியாம திணறிட்டு இருக்கிறோம். இதுக்கப்புறமும் யூனியன் ஆபீஸ்ல இருந்து, நுாறு நாள் வேலை திட்டத்தில் இருந்து பில்டிங் கட்ட காண்ட்ரக்ட் கொடுத்தாலும், யாரும் வேலை எடுத்து பண்ண மாட்டோம். இத்தனை நாளா செஞ்ச வேலைக்கு பணம் கேட்டும் கொடுக்காத கவர்ன்மென்ட், எலக்சன் வர்றப்ப மட்டும் மகளிர் உரிமைத்தொகையா, ஐந்தாயிரம் கொடுத்திருக்காங்க. இந்த மாதிரி எல்லாம் பண்ணுனா வேலை எடுத்து செய்வதற்கு விருப்பமே இருக்காது. எப்படியோ எங்க பணம் சீக்கிரமா வந்தா நல்லா இருக்கும்னு, புலம்பினார். ஓட்டுப்போடும் மக்கள கவரஎப்படியெல்லாம் பேசறாங்க! குடிமங்கலம் நாலு ரோடு பஸ் ஸ்டாப்புல கிராம மக்கள் சிலர் விரக்தியோட பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன பிரச்னைனு கவனித்தேன். குடிமங்கலம் ஒன்றிய கிராமங்கள்ல, குடிநீருக்காக மக்களும் போராட்ட துவங்கியிருக்காங்க. பல கிராமங்களில், ரோடு மேம்பாட்டு பணிகளும் கிடப்புல இருக்குது. நிதி ஒதுக்கீடு செய்து, துவங்கிய பணிகளும் அரைகுறையாக இருக்குது. சமீபத்துல, பிரசார கூட்டமும், பரிசு பொருட்கள் வினியோகத்த அ.தி.மு.க.,காரங்க, இந்த ரோடு பிரச்னைய முக்கிய பிரசாரமா பண்ணினாங்க. தி.மு.க., ஆட்சிக்காலத்தில், குடிமங்கலம் ஒன்றியத்துக்கு ஒதுக்கிய நிதி எல்லாம் மாயமாயிருச்சு. ஒரு ரோடு கூட உருப்படியாக போடல. குண்டும், குழியுமான ரோட்டுல பயணிக்க வைத்து மக்கள சிரமப்படுத்துறாங்க. அதிகாரிகளும், ஆளுங்கட்சிக்கு சாதகமா இருக்காங்கனு, அ.தி.மு.க.,காரங்க பிரசாரம் பண்ணினாங்க. இதை கேட்ட தி.மு.க., காரங்க, மக்களிடையே தங்கள் தரப்புக்கு வேறு பிரசாரத்தை துவக்கியிருக்காங்க. 'ரோடு பணிகள தங்களுக்கு வேண்டிய அதிகாரிகள கைக்குள்ள வச்சுக்கிட்டு, அ.தி.மு.க.,காரங்களே முடக்கியிருக்காங்க. எங்கள் மேல வீண் பழிசுமத்தி, அதிருப்திய அதிகரிக்கும் நோக்கத்துல இப்படி பண்ணுறாங்க. அவங்க பேசறத நம்பாதீங்க மக்களே, என, தி.மு.க.,காரங்க விளக்கமளிக்கறாங்க. இப்படி போட்டி போட்டு பிரசாரம் பண்ணியும், பொறுப்புள்ள அதிகாரிகள், எந்த ரியாக் ஷனும் காட்டாம அமைதியா இருக்காங்க. ரெண்டு கட்சியினரும் போட்டி போட்டு, வளர்ச்சி பணிகள வேகப்படுத்தியிருந்தா பரவாயில்ல. முடங்கி கிடக்கற பணிகள பத்தியே பேசிட்டு இருக்காங்க. நமது ஒன்றியத்துல, வேலை நடக்காமல் இருக்கறதுக்கு இரு கட்சிக்காரர்களும் நடவடிக்கை எடுக்காம மாற்றி, மாற்றி குறை சொல்லிட்டு இருக்காங்க. இதற்கெல்லாம், தேர்தல்ல தான் பதில் சொல்லணும்னு, பேசிக்கிட்டாங்க. குப்பையில கிடந்த அரசு முட்டை ஓடுஎங்கிருந்து வந்துச்சுனு விசாரிக்கறாங்க பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்ப, சத்துணவு முட்டை ேஹாட்டலுக்கு வருது தெரியுமானு, பேச ஆரம்பித்தார். பொள்ளாச்சி நகராட்சி பகுதியில, காலை நேரத்துல துாய்மை பணியாளர்கள் குப்பைய சுத்தம் செய்யுறது வழக்கம். ரெண்டு நாட்களுக்கு முன், ராஜாமில் ரோட்டுல குப்பைய சுத்தம் செய்த துாய்மை பணியாளர்களுக்கு அதிர்ச்சி காந்திருச்சு. அங்கு, குப்பை அள்ளிய போது, அரசு சார்பில் வழங்கப்படும் முட்டையோட ஓடுகள் அங்க குவிந்து கிடந்திருக்கு. குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்துல கொடுக்க கூடிய முட்டைகளாக இருக்கலாமா; அப்படி இருந்தால், அவர்கள் வெளியே கொட்ட வாய்ப்பு இல்லையே. அதுவும் இவ்வளவு முட்டை தோல்கள் ஒரே இடத்துக்கு எப்படி வந்துச்சுனு அவங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கு. இது பற்றி, சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து இருக்காங்க. அங்கு வந்த அதிகாரிகளும், அது குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை ஓடுகளானு ஆய்வு பண்ணிணாங்க. ஒரு வழியா, அதெல்லாம் அங்கன்வாடி மையத்துக்கு வழங்கிய முட்டையோட ஓடுனு கண்டுபிடிச்சுட்டாங்க. குழந்தைகளுக்கு அரசாங்கம் கொடுக்கற முட்டை எப்படி வந்துச்சு. அந்த ஊழியர்கள் முட்டைய ேஹாட்டலுக்கு வித்துட்டாங்களானு விசாரணை பண்ணிக்கிட்டு இருக்காங்க. அங்கன்வாடிக்கு வழங்க சத்துமாவு, முட்டையெல்லாம் இப்படி வெளியில வந்தா, குழந்தைகளுக்கு எப்படி சத்தான உணவு கொடுப்பாங்கனு, ஆதங்கத்தோடு பேசினார். பாக்கெட்டை நிரப்பும் அதிகாரிகளாலகாலாவதி பொருட்கள் விற்பனை ஜோர் வால்பாறை நகரில் உள்ள கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை ஜோராக நடக்குனு, டீ கடையில் இருவர் பேசிக்கொண்டனர். அவங்க பேசிக்கொண்டதில் இருந்து... சுற்றுலா பயணியர் அதிகம் வந்த செல்லும் வால்பாறை நகருல, லீவு நாட்களில் கூட்டம் அதிகமா இருக்குது. இந்த நேரத்துல, இங்குள்ள கடைகள்ல, காலாவதியான உணவு பொருட்கள், குளிர்பானங்கள விற்பனை பண்ணுறாங்க. இது மட்டுமில்லாம, பெரும்பாலான ேஹாட்டல்கள்ல சுகாதாரமின்றி உணவு பொருட்கள் தயாரிக்கறாங்க. பல்வேறு பகுதியிலிருந்து வரும் சுற்றுலா பயணியர் வேறு வழியில்லாம, கிடைக்கறத வாங்கி சாப்பிடுறாங்க. இதனால, வால்பாறையில உணவு பொருட்கள வாங்கி சாப்பிடுற சுற்றுலா பயணியரோட உடல் நலம் பாதிக்கும். காலாவதியான உணவு பொருட்கள் விற்பனைய தடுக்க வேண்டிய அதிகாரிகள, வால்பாறையில் உள்ள கடைகளில் மாச மாசம் வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு, பொள்ளாச்சியிலேயே இருந்துக்கறாங்க. கண் துடைப்புக்காக ஏதாவது ஒரு நாள் வந்துட்டு, ஆய்வு செய்த மாதிரி போஸ் கொடுத்து படம் மட்டும் எடுத்துக்கறாங்க. மக்களுக்கு சுகாதாரமான, ஆரோக்கியமான உணவு பொருட்கள் விற்பனை பண்ணணும்னு. இதை கண்காணிக்கறது தான் உணவு பாதுகாப்பு துறையோட வேலையே. ஆனா, கவர்ன்மென்ட்டுல சம்பளம் வாங்கிட்டு, சைடுல கிம்பளமும் வாங்கிட்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக பொழப்ப ஓட்டுறாங்கனு பேசிக்கிட்டாங்க.

குட்டைதிடல் ஏலத்துல சிண்டிகேட் போட்டு 'கோல்மால்'

உடுமலை பஸ் ஸ்டாண்டில் நண்பரை சந்தித்த போது, குட்டை திடல் ஏலம் விவகாரம் குறித்து புலம்ப ஆரம்பித்தார். என்ன பிரச்னைனு விசாரிச்சேன். உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்கு, குட்டை திடலில் திருவிழா கடைகள், ராட்டிணம் அமைக்க, வருவாய்த்துறையால ஏலம் விடப்படும். அரசியல் கட்சியினர் ஆசியோடு, 'சிண்டிகேட்' அமைத்து, அரசு நிர்ணயித்த தொகையை விட, பல மடங்கு குறைச்சு ஏலம் எடுத்து, லாபம் பார்க்கறாங்க. போன வருஷமும், குறைந்த தொகைக்கு ஏலம் எடுத்து, மக்களிடம் அதிக கட்டணம் வசூலிச்சு, லாபம் பார்த்தாங்க. நடப்பாண்டும், 1.20 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கற நிலையில, தேர்தலுக்கு முன்னதாக ஏலத்த முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டிருக்காங்க. ஆனா, அரசியல் கட்சிகளோட பின்னணியில, 'சிண்டிகேட்' அமைச்சு, ஏலம் எடுக்காம தவிர்த்து வருவதோடு, தொகையை குறைக்க வலியுறுத்திட்டு இருக்காங்க. ஆண்டு தோறும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, பொதுமக்களுக்கும் கட்டண சுமை அதிகரிக்குது. பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டு விபத்துக்கள் நடக்குது. பாரம்பரியமாக, பல ஆண்டுகளா திருவிழா நடக்கும் நிலையில, குறைந்த கட்டணத்துல பொழுதுபோக்கு அம்சங்கள பொதுமக்கள் பயன்படுத்தணும். மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் அனுபவிக்கும் வகையில, சுற்றுலாத்துறை இந்த ஏலத்த நடத்த வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலா மையங்கள் குறைவா இருக்கறதோட, சுற்றுலா வளர்ச்சி குறித்து கண்டு கொள்ளாத சுற்றுலாத்துறை, மாரியம்மன் கோவில் திருவிழாவில், பொழுதுபோக்கு அம்சங்கள நிறுவ, மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கணும்னு சொன்னார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை