உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னை நார் தொழிலை பாதுகாக்க வேண்டுகோள்!ஆதார விலை நிர்ணயிக்க வலியுறுத்தல்

தென்னை நார் தொழிலை பாதுகாக்க வேண்டுகோள்!ஆதார விலை நிர்ணயிக்க வலியுறுத்தல்

பொள்ளாச்சி: தென்னை நார் தொழில் நிலை தன்மையை பாதுகாக்க, குறைந்த பட்சம் ஆதரவு விலை அடிப்படையில், ஏற்றுமதி விலை நிர்ணயித்து, இடைவிடாமல் பொருட்கள் வாங்க வேண்டும் என, கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், ஏற்றுமதியாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உலக சந்தையில், தமிழக தென்னை நார் பொருட்களுக்கு மவுசு உள்ளது. தற்போது, உலக பொருளாதார நிலை மாற்றம், போர் சூழல் காரணமாக, தென்னை நார் பொருட்கள் தேக்கமடைந்து விலை குறைகிறது. இச்சூழலில், தென்னை நார் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வலியுறுத்தி, ஏற்றுதியாளர்கள், தென்னை சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட ஏற்றுமதி தொழில் முனைவோர், தென்னை நார் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கங்கள் மற்றும் அவற்றின் கூட்டமைப்புகளுக்கு, கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சிவமுருகானந்தம் கூறியதாவது: உலக சந்தையில் நிலவும் கடுமையான போட்டி, சர்வதேச பொருளாதார மந்தநிலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மூலப்பொருட்களின் விலை ஏற்றம், இறக்கம், தொழிலாளர் பற்றாக்குறை, மின் கட்டண உயர்வு, வங்கி வட்டி சுமை, உற்பத்தி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் மிக நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. அதில், தென்னை நார், தென்னை நார் துகள், மட்டை சிப்ஸ் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இன்று மிகவும் குறைந்த லாபத்திலோ அல்லது பல சந்தர்ப்பங்களில் நஷ்டத்திலும் இயங்குகின்றன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம், தொழிலின் தொடர்ச்சியையும் கருத்தில் கொண்டு பெரும்பாலான உற்பத்தியாளர்கள், உற்பத்தியை நிறுத்தம் செய்யாமல் தொடர்ந்து கொண்டுள்ளனர். உலக சந்தையில் ஆர்டர்களை பெறும் நோக்கில், சில நேரங்களில் உற்பத்தி செலவுக்கும் குறைந்த விலையில் ஏற்றுமதி ஒப்பந்தங்கள் மேற்கொள்வது கவலைக்குரியதாக மாறியுள்ளது. இத்தகைய விலைப்போட்டி தென்னை நார் தொழில்துறையை பாதிக்கும். தொடர் நஷ்டம் காரணமாக உற்பத்தியை குறைக்க நேரிட்டால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் உருவாகும். விவசாயிகள், வியாபாரிகளிடம் இருந்து மட்டை கொள்முதல் செய்வது குறையும். கிராம பொருளாதாரம் பாதிக்கப்படும். தரமான மூல பொருட்கள் உற்பத்தி குறையும். உயர்தர பொருட்கள் தயாரிக்கும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும். இந்திய தென்னை நார் துறையின் உலகளாவிய நம்பகத்தன்மையும் போட்டித்திறனும் பாதிக்கும். இச்சூழலை கருத்தில் கொண்டு தென்னை நார் உற்பத்தியாளர்களின் நியாயமான உற்பத்தி செலவு, அத்தியாவசிய நிர்வாக செலவுகளை ஈடு செய்யும் வகையில், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும். அந்த விலைக்கு கீழ் எவ்வித ஆர்டரையும் ஏற்காமல் இருக்க வேண்டும். தென்னை நார் ஆதார விலை, 30 கிலோ பேலுக்கு, 350 ரூபாயும், தென்னை நார் துகள் குறைந்தபட்ச ஆதார விலை கிலோவுக்கு, 42 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும். தென்னை நார் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விலையை நிர்ணயித்து ஆர்டர்களை மேற்கொள்ள வேண்டும். விலை நிர்ணயம் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான வருவாயை வழங்க வேண்டும். தொழில்துறையில் உள்ள ஆயிரக்கணக்கான தொழில் முனைவோரும், தொழிலாளர்களை மனதில் கொள்ள வேண்டும். உலக சந்தையில் நியாயமான விலையை உருவாக்குவது, தேவையற்ற விலைப்போட்டியை தவிர்ப்பது, உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இருவரின் நலனை பாதுகாப்பது, அனைவரின் கூட்டு பொறுப்பாகும். இது குறித்து அவர்களுக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !