வருவாய் மாவட்ட தடகள போட்டி; வெற்றி தடம் பதித்த மாணவர்கள்
கோவை; பள்ளி கல்வித்துறை சார்பில், கோவை வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டி, கோவை நேரு ஸ்டேடியத்தில் இரு நாட்கள் நடந்தது. மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப் பள்ளி சார்பில் நடந்த போட்டிகளில், 1,760 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாணவியருக்கான(17 வயதுக்குட்பட்ட), 400 மீ., ஓட்டத்தில் சாலினி, சுசித்ரா, தர்ஷினி ஆகியோரும், 1,500 மீ., ஓட்டத்தில் ரமிதா, ஜெரால்டின் சானா, ஏன்லின் லிரிண்டா ஆகியோரும், நீளம் தாண்டுதலில் ஜோகிதா, சஷ்திகா, அதினா ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். உயரம் தாண்டுதலில் பரணி, அபிநயா, மதுஸ்ரீ ஆகியோரும், மும்முறை தாண்டுதலில் தக்சின்யா, பிரின்சி ஜாய், சஜிதா ஆகியோரும், வட்டு எறிதலில் ஜெனிபர், நெகரிகா, ரூபி ஆகியோரும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவு, 1,500 மீ., ஓட்டத்தில் ஹன்சினி, கமலி, சம்யுக்தா ஆகியோர் முதல் மூன்று இடங்களை தட்டிச் சென்றனர். அதேபோல், 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான வட்டு எறிதலில் விஸ்வ பாரதி, நிர்மல், விமல்குமார் ஆகியோர், முதல் மூன்று இடங்களை வென்றனர். 17 வயதுக்குட்பட்டோருக்கான, 1,500 மீ., ஓட்டத்தில் பிரதேந்தர், கிஷோர் குமார், கவின் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.