ரூ.7,000 தீபாவளி போனஸ்; எச்.எம்.எஸ். வலியுறுத்தல்
கோவை; 'ஹிந்த் மஸ்துார் சபா' (எச்.எம்.எஸ்.,) தமிழ் மாநில நிர்வாகக்குழு கூட்டம், கோவை ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள, எஸ்.ஆர்.எம்.யூ., அரங்கில் நடந்தது. கட்டுமான அமைப்பு சாரா நிர்வாகிகள் உட்பட, 150 பேர் பங்கேற்றனர். எச்.எம்.எஸ்., தேசிய தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமையிலும், மாநில செயலாளர் ராஜாமணி, மாவட்ட செயலாளர் மனோகரன் முன்னிலையிலும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், 'எச்.எம்.எஸ்., அமைப்பின் 31வது தமிழ் மாநில மாநாடு, டிச. 14ல் கோவை காளப்பட்டியில் நடக்கிறது. துறை சார்ந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். எச்.எம்.எஸ்., கட்டுமான அமைப்பு சாரா பேரவை சார்பில், ரூ.7,000 போனஸ் கோரிக்கையை, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் வாயிலாக, அரசின் கவனத்துக்கு தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.