உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில தடகளப் போட்டிக்கு ஏழு மாணவர்கள் தேர்வு

மாநில தடகளப் போட்டிக்கு ஏழு மாணவர்கள் தேர்வு

மேட்டுப்பாளையம்: -: கோவை வருவாய் மாவட்ட அளவில் நடந்த தடகளப் போட்டிகளில், மேட்டுப்பாளையத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, ஏழு மாணவர்கள் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில், கோவை வருவாய் மாவட்ட அளவில், தடகளப் போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் இரண்டு நாட்கள் நடந்தன. இதில் மாவட்ட அளவில் கோலூன்றி தாண்டுதல் போட்டியில், மூத்தவர் பிரிவில் புஜங்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பரமகுரு முதலிடத்தையும், ராகுல் பிரசாத் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். இந்த இரண்டு மாணவர்களும், மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். இந்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிமணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கந்தசாமி மற்றும் உறுப்பினர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர். வருவாய் மாவட்ட தடகளப் போட்டியில் மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப்பள்ளி மாணவன் ஸ்ரீநாத் வட்டெறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், முகமது அன்சில் ரகுமான் 110 மீட்டர் தடை தாண்டு ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், மும்முறை தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கமும் பெற்றார். 14 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் நிர்மல் வட்டெறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றார். இந்த மூன்று மாணவர்களும், மாநில அளவில் நடைபெறும் தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த மாணவர்களை, பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். கோவையில் நடந்த வருவாய் மாவட்ட தடகளப் போட்டியில், 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மேட்டுப்பாளையம் மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் சாணக்கியா, 80 மீட்டர் தடை தாண்டு ஓட்டப்பந்தயத்திலும், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் தங்கம் வென்று, தனிநபர் சாம்பியன் பட்டத்தை பெற்றார். 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாணவன் ஜோ அகஸ்டின் ஈட்டி மற்றும் குண்டு எறிதல் போட்டிகளில் தங்கமும், தட்டு எறிதலில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இவர்கள் இருவரும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். இந்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியை சுலோச்சனா மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை