திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம்
உடுமலை: உடுமலை நகராட்சி சார்பில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், திடக்கழிவு மேலாண்மை விதி அடிப்படையில் கழிவுகள் தரம் பிரித்தல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. உடுமலை நகராட்சி பகுதிகளில், திடக்கழிவு மேலாண்மை விதிகள் அடிப்படையில், கழிவுகள் நான்கு வகையாக பிரித்து, துாய்மைப்பணியாளர்கள் வாயிலாக பெறப்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், பள்ளி மாணவ, மாணவியரை, விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்தும் வகையில், பள்ளிகளில் இது குறித்த முகாம் நடந்து வருகிறது. நேற்று, உடுமலை நகராட்சி கமிஷனர் குமரன் தலைமையில், நகர் நல அலுவலர் டாக்டர் அமுதவல்லி முன்னிலையில், பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவியருக்கு, திடக்கழிவு மேலாண்மை கழிவுகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து தருவது குறித்தும், டெங்கு காய்ச்சல் பரவுதல்,போதை ஒழிப்பு, தன் சுத்தம் குறித்து, பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. துப்புரவு ஆய்வாளர்கள் செல்வம், ராஜ்மோகன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், துாய்மை பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.