ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை; பக்தர்கள் பக்தி பரவசம்
-நிருபர் குழு--கோவை புறநகர் பகுதிகளான பெரியநாயக்கன்பாளையம், சூலுார், மேட்டுப்பாளையத்தில் உள்ள கோவில்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். பெ.நா.பாளையம்
பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சின்னதடாகம் வட்டாரங்களில் ஆங்கில புத்தாண்டை ஒட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நரசிம்மநாயக்கன்பாளையம் சித்தி விநாயகர் கோவிலில் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, முருகன், வள்ளி, தெய்வானை சிறப்பு பூஜைகள் நடந்தன.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.காளிபாளையம் திருமலைராயர் பெருமாள் கோவிலில் பூதேவி, ஸ்ரீதேவி சமேத திருமலை ராயப்பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதே போல பாலமலை ரங்கநாதர் கோவில், நாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் கரி வரதராஜ பெருமாள் கோவில், நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள், சக்தி மாரியம்மன் கோவில், காமாட்சியம்மன் கோவில், அப்புலு பாளையம் வெங்கடேச பெருமாள் கோவில், நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், ஆனைகட்டி பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சூலூர்
ஆங்கில புத்தாண்டு பிறப்பை ஒட்டி, சூலூர் வட்டாரத்தில் உள்ள கோவில்கள் நேற்று அதிகாலை திறக்கப்பட்டன. சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சூலூர் வைத்தீஸ்வரன் கோவில், திருவேங்கடநாத பெருமாள் கோவில், அறுபடை முருகன் கோவில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில், செஞ்சேரிமலை வேலாயுத சுவாமி கோவில், அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள், குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி மற்றும் அம்மனை வழிபட்டனர். மேட்டுப்பாளையம்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவிலில் காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அம்மனுக்கு அபிஷேக பூஜை நடந்தது. மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவிலில், காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் அம்மன் சுவாமியை வழிபட்டனர். மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில், விநாயகருக்கும், வெள்ளிங்கிரி ஆண்டவர், முருகர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.