பதில் சொல்லி பரிசை வெல்ல மாணவர்கள் ஆர்வம்: தினமலர்-பட்டம் வினாடி-வினாவில் அசத்தல்
பொள்ளாச்சி: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டியில், பொள்ளாச்சி சாமியாண்டிபுதுார் ரைஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அரையிறுதி போட்டிக்கு தேர்வாகினர். மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவு திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழ், 'பட்டம்' இதழ் சார்பில் மெகா வினாடி - வினா போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு போட்டியானது, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் வினாடி - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட்' 'ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன. இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி சாமியாண்டிபுதுார் ரைஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் வினாடி - வினா போட்டி நடந்தது. தகுதிச்சுற்றில், 100 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளியளவில் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான போட்டியில், 'ஏ' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஹாசினி, ஜெசின் ரூபிசா சாலோம் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு, ஒருங்கிணைப்பாளர் மதீனா, முதல்வர் ஜோதிலட்சுமி, திட்ட இயக்குனர் நேகா, நிர்வாக அலுவலர் அருணா, ஆசிரியர் அருண்குமார் ஆகியோர், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். அறிவு களஞ்சியம்! பள்ளி முதல்வர் ஜோதிலட்சுமி கூறுகையில், ''பட்டம் என்பது குழந்தைகளுக்காக வெளியிடப்படும் சிறப்பான இதழ் ஆகும். இதன் முக்கிய நோக்கம் குழந்தையின் அறிவை விரிவுப்படுத்துவது, வாசிப்பு திறனை மேம்படுத்துவது, புதிய விஷயங்களை அறிய ஊக்குவிப்பது, நல்ல நற்பண்புகளை விதைப்பதாகும். மாணவர்களின் கற்பனை திறனையும், அறிவையும் வெளிப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும், குழந்தைகளுக்கு அறிவியல் தகவல்கள், கதைகள், கார்ட்டூன்கள், கல்வி மற்றும் புதிர்கள், படைப்பு கட்டுரைகள் போன்றவற்றை அறிய உதவுகிறது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு ஒரு அறிவு களஞ்சியமாக செயல்படுகிறது,'' என்றார்.
'பட்டம்' படிப்போம்; உயர பறப்போம்!
மாணவி ஹாசினி கூறுகையில், ''பட்டம் இதழ் வாயிலாக பொது அறிவு சம்பந்தமான பல வினா விடைகளை கற்றுக்கொள்கிறோம். உலகச் செய்திகள் பலவற்றை 'பட்டம்' இதழ் வாயிலாக தெரிந்து கொள்கிறோம். இதில் உள்ள, விடுகதைகள் மற்றும் விளையாட்டுக்கள் குறித்த தகவல்களை படிப்பதற்கு ஆர்வமாக உள்ளது. இதில் வரும் கதைகளை படிப்பது சுவாரஸ்யமாக இருக்கும். பல கணித வினா, விடைகள், செஸ் (சதுரங்க) விளையாட்டு நுணுக்கங்களை கற்றுக்கொள்கிறோம். பல அறிவியல் செயல்முறைகள், விளையாட்டு செய்திகளை தெரிந்து கொள்ள முடிகிறது. உலகமெங்கும் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை தொகுத்து தருவதில் பட்டம் இதழுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை,'' என்றார். மாணவி ஜெசின் ரூபிசா சாலோம் கூறுகையில், ''நம் நாடு மற்றும் முன்னோர்களின் வரலாற்றை 'பட்டம்' இதழ் வாயிலாக அறிந்து கொள்கிறோம். பல அரிய வகை உயிரினங்கள், நாம் அறிந்திராத விலங்குகள் குறித்தும் தெரிந்து கொள்ள 'பட்டம்' இதழ் உதவியாக உள்ளது. அரசாங்க அறிவிப்புகள்உலக பொருளாதாரத்தை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்கிறேன். வருங்காலத்தில் சந்திக்க இருக்கும் அரசு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள, 'பட்டம்' இதழில் வெளி வரும் செய்திகளை படித்து தெரிந்து கொள்வதே அதற்குரிய முதல் படியாகும். 'பட்டம்' இதழ் படிப்போம்; வருங்காலத்தில் வெற்றி வானில் உயர பறப்போம்,'' என்றார்.