உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ‘தினமலர்’ பட்டம் வினாடி–வினா போட்டி விறுவிறு சுற்றில் மாணவர்கள் வெற்றி

‘தினமலர்’ பட்டம் வினாடி–வினா போட்டி விறுவிறு சுற்றில் மாணவர்கள் வெற்றி

கோவை: ‘தினமலர்’ நாளிதழின் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ இதழ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி சார்பில், ‘பதில் சொல்; பரிசை வெல்’ எனும் மெகா வினாடி–வினா போட்டி, புஜங்கனுார் , டி.ஆர்.ஜி. மெட்ரிக் பள்ளி மற்றும் மேட்டுப்பாளையம், மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தையும், பொது அறிவுத் தேடலையும் ஊக்குவிக்கும் வகையில், ‘பட்டம்’ இதழில் பல்வேறு துறைகள் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, மாணவர்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தவும், சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும் 2018ம் ஆண்டு முதல் வினாடி–வினா போட்டி நடத்தப்படுகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பள்ளிகள் இப்போட்டியில் பங்கேற்று வருகின்றன. பள்ளி அளவிலான சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கும், அதிலிருந்து தேர்வு செய்யப்படும் எட்டு அணிகள் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெறுகின்றன. இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. டி.ஆர்.ஜி., மெட்ரிக் பள்ளி இதன் ஒரு பகுதியாக, புஜங்கனுார் டி.ஆர்.ஜி. மெட்ரிக் பள்ளியில் நடந்த தகுதிச்சுற்றுப் போட்டியில், 64 மாணவர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்றனர். தொடர்ந்து நடந்த வாய்மொழி வினாடி–வினா சுற்றில், 'எப்' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு தர்ஷனா, ஒன்பதாம் வகுப்பு ராம்சரண் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர். மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் மீனாட்சி பரிசுகளை வழங்கி பாராட்டினார். மெட்ரோ மெட்ரிக் பள்ளி மேட்டுப்பாளையம், மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில், 86 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 'டி' அணியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு 'சி' பிரிவு அஷ்வீனா, ஏழாம் வகுப்பு 'டி' பிரிவு கிருபா ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர். மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் சுலோச்சனா பரிசுகளை வழங்கி பாராட்டினார். இப்போட்டிக்கு சத்யா ஏஜென்சீஸ் இணை ஆதரவாளராகவும், ஸ்போர்ட்ஸ் ஹப் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிறுவனமாகவும் கரம் கோர்த்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ