பத்திரப்பதிவு துறை சர்வர் முடங்கியது! அறிவிக்காமல் அரசு கொர்
கோவை: தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில், பதிவுத்துறை சேவையை நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தி, நடைமுறைப்படுத்தும் பணி சில தினங்களாக நடந்து வருகிறது. இதனால், பத்திரப்பதிவு முடங்கியுள்ளது. ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு மேற்கொள்ள முயற்சித்தும் முடியாமல், ஆவண எழுத்தர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். கோயமுத்துார் டாக்குமென்ட் ரைட்டர்ஸ் அசோசியேஷன் நிர்வாகி ஆன்டனி கூறுகையில், ''கோவையில் உள்ள 17 பத்திரப்பதிவு அலுவலகங்களில், நாளொன்றுக்கு சராசரியாக தலா 100 பத்திரங்கள் பதிவாகும். சர்வர் தொய்வு காரணமாக, அதிகபட்சமாக 10 பத்திரங்களே பதிவானது. சர்வர் பணி நடக்கிறதென்றால், பத்திரப்பதிவுகள் ரத்து செய்வதாக, அரசு அறிவித்தால் ஆவண எழுத்தர்களும், பத்திரப்பதிவு செய்ய வரும் மக்களும் காத்திருந்து, ஏமாற மாட்டார்கள். எவ்வித அறிவிப்பையும் அரசு வெளியிடாததால் மக்களும், ஆவண எழுத்தர்களும் பாதிக்கப்படுகின்றனர்,'' என்றார். கோவை மண்டல பத்திரப்பதிவு துணை தலைவர் பிரபாகரனிடம் கேட்டபோது, ''சர்வரை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள, அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும், சர்வர் காரணமாக தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மை. ஓரிரு தினங்களில் சரியாகி விடும். அதன்பின், அதிகபட்ச வேகத்துடன் செயல்படும். அதுவரை பொறுத்திருக்க வேண்டும். ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது, இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுவது சகஜம்,'' என்றார்.