பயணியர் நிழற்கூரையை நாலு மாசமாகியும் திறக்கல
வால்பாறை : வால்பாறையில், பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்கூரை, நான்கு மாதங்களாகியும் திறக்கப்படாததால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.வால்பாறை நகராட்சி அலுவலகம் முன், பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்த பயணியர் நிழற்கூரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், அலுவலக விரிவாக்கத்தின் போது இடிக்கப்பட்டது.இதனால், அங்கு காத்திருக்கும் பயணியர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவதிக்குள்ளாயினர். நகராட்சி அலுவலகத்தின் முன், பொதுமக்கள் நலன் கருதி பயணியர் நிழற்கூரை கட்ட வேண்டும் என, வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் கோரிக்கை விடுத்தன.அதன் அடிப்படையில், நகராட்சி அலவலகத்தின் முன், 9.90 ரூபாய் மதிப்பீட்டில் நவீன முறையில் பயணியர் நிழற்கூரை கட்டி முடிக்கப்பட்டு, நான்கு மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால், நகராட்சி நிர்வாகத்தின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளியிடம் கேட்ட போது, ''பயணியர் நிழற்கூரை முன் கல்வெட்டு வைக்க தாமதம் ஏற்பட்டுள்ளதாலும், சுற்றிலும் தடுப்பு கம்பி கட்ட வேண்டியுள்ளதாலும், திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக பயணியர் நிழற்கூரை திறக்கப்படும்,'' என்றார்.