இந்துக்களை ஒன்றிணைக்க உருவானது ஆர்.எஸ்.எஸ்.
சூலுார்; சூழ்ச்சியால் பிரிந்து இருந்த இந்துக்களை ஒன்றிணைக்க உருவானது தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம், என, விஜயதசமி விழாவில் தெரிவிக்கப்பட்டது. இடையர் பாளையம் மண்டல் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில், விஜய தசமி மற்றும் நூற்றாண்டு விழா, சுல்தான்பேட்டை அடுத்த இடையர்பாளையத்தில் நடந்தது. மூர்த்தி லிங்க தம்பிரான் சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் பேசியதாவது: மு ஸ்லிம்கள் மற்றும் ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் அடிமைபட்டு கிடந்தோம் என்பதை விட, 1000 ஆண்டுகள் அவர்களை எதிர்த்து போராடினோம் என்பது தான் உண்மை. அவர்களை எதிர்த்து லட்சக்கணக்கானோர் தீரத்துடன் போராடி உயிர் தியாகம் செய்தனர். சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம். ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை அறிந்த, ஹெட்கேவர் என்ற இளைஞர், விஜய தசமி நாளில் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை தோற்றுவித்தார். பிரிந்து கிடந்த இந்துக்களை ஒன்றிணைக்க உருவானதுதான் சங்கம். தினசரி சந்தித்து நாட்டின் முன்னேற்றம் குறித்து சுயம்சேவகர்கள் சிந்தித்தனர். தடைகளை உடைத்து நாட்டிற்காகவும், சமுதாயத்துக்காகவும் உழைத்தனர். இன்று, சங்கம் இல்லாத இடமே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத், வி.எச்.பி.,பாரதிய மஸ்தூர் சங்கம் என, பல கிளைகளாக பரவி உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.