இறைச்சி கடைகளால் போக்குவரத்து பாதிப்பு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், ஞாயிறு தினத்தன்று போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்படும் தற்காலிக இறைச்சி கடைகளால் பொதுமக்கள் பாதிக்கின்றனர். பொள்ளாச்சி சுற்றுப்பகுதி வழித்தடங்களில் வணிக கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவ்வகையில், ஞாயிறுக்கிழமைகளில் பல பகுதிகளில் தற்காலிக இறைச்சிக் கடைகள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக, ரோடு சந்திப்பு, திருப்பங்கள் உள்ளிட்ட பகுதிகளில், போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்படும் கடைகளால் பாதிப்பு ஏற்படுகிறது. மக்கள் கூறியதாவது: ஞாயிறுக்கிழமைகளில் மட்டும் பல இடங்களில் கோழி, மீன் மற்றும் ஆட்டிறைச்சி கடைகள் செயல்படுகின்றன. கழிவுநீர் கால்வாய், ரோட்டின் திருப்பங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்படும் கடைகளால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இறைச்சி வாங்க வரும் வாடிக்கையாளர்கள், தங்களது வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்துகின்றனர். குறிப்பாக, சூளேஸ்வரன்பட்டி, சமத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இத்தகைய செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. ரோட்டில் வாகனங்கள் நிறுத்தாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.