தேர்ச்சி அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி
கோவை: பொது தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் நோக்கில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு பாடவாரியாக சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் கணிதம், சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு கோவை சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளியில் பயிற்சி நடக்கிறது. ஜூன் மாதம் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அனைத்து பாடங்களிலும் சிறப்பு நிபுணர்கள் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கோவை மாவட்டத்தில் தமிழ் பாடத்தில் 99.42 சதவீதம், ஆங்கிலத்தில் 99.86 சதவீதம், அறிவியலில் 99.11 சதவீதம் தேர்ச்சி பதிவானது. கணிதத்தில் 98.47 சதவீதம், சமூக அறிவியலில் 98.95 சதவீதம் மட்டுமே தேர்ச்சி கிடைத்தது. இதையடுத்து, இப்பாடங்களில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா கூறுகையில், ''கடினமான பாடப்பகுதிகளை எளிமையாக கற்பிக்கும் நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். அரையாண்டு தேர்வுக்கு பின் முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, தேவையான பாடங்களுக்கு தொடர்ந்து சிறப்பு பயிற்சி வழங்கப்படும்,'' என்றார்.