டாக்டரை தாக்கி காயப்படுத்தியதால் காட்டு யானையை பிடிப்பதில் சிக்கல்
தொண்டாமுத்துார்:' ரோலக்ஸ்' காட்டு யானை, தன்னை பிடிக்க மயக்க ஊசி செலுத்த வந்த டாக்டரை தாக்கி காயப்படுத்தியதால், அந்த பணிக்கு வேறு டாக்டர்கள் வர தயக்கம் காட்டுகின்றனர். கோவை மற்றும் போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட மலையடிவாரத்தை ஒட்டியுள்ள விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை ரோலக்ஸ் அடிக்கடி வந்து செல்கிறது. பயிர்களை சேதப்படுத்துவதால், விவசாயிகள் பாதிப்படைகின்றனர். அந்த யானையை பிடித்து வேறிடத்தில் விடுவதற்காக, டாப்சிலிப் முகாமில் இருந்து மூன்று கும்கிகள் வரவழைக்கப்பட்டன. யானையை பிடிக்கும் பணிக்கு, ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை டாக்டர் விஜயராகவன் நியமிக்கப்பட்டார். செப்., 20ல் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்தபோது, விஜயராகவன் தலைமையிலான குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். எதிர்பாராத விதமாக, ரோலக்ஸ் திரும்பி வந்து, விஜயராகவனை தள்ளி விட்டதில், முதுகு, கை விரலில் பலத்த காயம் ஏற்பட்டது. முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இரு வாரங்களாக சிகிச்சை பெறுகிறார். அதன்பின், யானையை பிடிக்கும் பணிக்காக, முதுமலை யானைகள் முகாம் மற்றும் மற்ற மாவட்ட வன கால்நடை டாக்டர்களுக்கு வனத்துறையினர் அழைப்பு விடுத்தனர். ஏற்கனவே, ஒரு டாக்டரை காட்டு யானை தாக்கியது மற்றும் பல்வேறு துறை ரீதியான பிரச்னைகள் காரணமாக, ரோலக்ஸ் யானையை பிடிக்கும் பணிக்கு வர, வனக்கால்நடை டாக்டர்கள் பலரும் தயக்கம் காட்டுகின்றனர். டாக்டர்கள் இல்லாததால், ரோலக்சை பிடிக்கும் பணி முடங்கியுள்ளது.