ரேஷன் கடைகளை சூறையாடிய யானைகளை விரட்ட முடியல!
வால்பாறை; வால்பாறை அருகே, நள்ளிரவில் ரேஷன் கடைகளை சூறையாடி காட்டுயானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவித்தனர்.வால்பாறையில், பருவமழைக்கு பின் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக, கேரள வனப்பகுதியில் இருந்து வரும் யானைகள், தனித்தனி கூட்டமாக வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட்களில் முகாமிட்டுள்ளன.குறிப்பாக, வாகமலை, அய்யர்பாடி, மாணிக்கா, வெள்ளமலை, செலாளிப்பாறை, புதுத்தோட்டம், வறட்டுப்பாறை, நல்லகாத்து உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் உலா வருகின்றன.பகல் நேரத்தில் தேயிலை காட்டில் யானைகள் முகாமிடுவதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அய்யர்பாடி ரோப்வே பகுதிக்குள் புகுந்த யானைகள், அங்குள்ள ரேஷன் கடை, சத்துணவு மையத்தை சேதப்படுத்தின. இதே போல் வால்பாறை அடுத்துள்ள வாகமலை எஸ்டேட் பகுதியில், மற்றொரு யானை கூட்டம் ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தியது.ஒரே நேரத்தில் பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டு, வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்துகின்றன. காட்டு யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிக்கின்றனர். இதனிடையே, குடியிருப்பு பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால், தொழிலாளர்கள் துாக்கமின்றி யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தொழிலாளர் குடியிருப்பு பகுதியில், யானைக்கு பிடித்தமான வாழை, பலா, கொய்யா பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். ரேஷன் கடைகளை தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.எஸ்டேட் பகுதியில் யானைகளால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க, ரேஷன் கடைகளை கன்டெய்னர் கடைகளாக மாற்ற வேண்டும். குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் வந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.