ஒப்பந்த துாய்மை பணியாளர் 574 பேருக்கு சீருடைகள் ரெடி
கோவை; மாநகராட்சியில் முதற்கட்டமாக கிழக்கு மண்டலத்தில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், 574 பேருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. கோவை மாநகராட்சியில், 4,650 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், 910 கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் டிரைவர், கிளீனர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். தவிர, 1,900க்கும் மேற்பட்ட நிரந்தர துாய்மை பணியாளர்கள் உள்ளனர். நிரந்தர துாய்மையாளர்களுக்கு மாநகராட்சி தரப்பில் சீருடை, ஷூ, ரெயின் கோட் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இரு ஆண்டுகளுக்கு முன்பு குப்பை சேகரிக்கும் பணி, தனியார் வசம் ஒப்பந்தம் அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒப்பந்த நிறுவனம் சார்பில் ஒப்பந்ததுாய்மை பணியாளர்களுக்கு, சீருடை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. பெண் துாய்மை பணியாளர்களுக்கு சேலை, 'டாப்' வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக, கிழக்கு மண்டலத்தில் பணிபுரியும், 574 ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் சீருடை வழங்கும் பணியை துவக்கிவைத்தார்.