கட்சி கருத்தரங்கில் பங்கேற்க இன்று கோவை வருகிறார் விஜய்
கோவை; த.வெ.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கருத்தரங்கில் பங்கேற்க, கட்சித் தலைவர் விஜய், இன்று காலை கோவை வருகிறார்.கோவை, குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ்.,கல்லுாரி வளாகத்தில், இன்றும், நாளையும், தமிழக வெற்றிக் கழகத்தின் ஓட்டுச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் நடக்கிறது. இன்று, 10 கழக மாவட்டங்களை சேர்ந்த முகவர்கள், நாளை 13 கழக மாவட்டங்களை சேர்ந்த முகவர்கள் பங்கேற்க உள்ளனர்.இரு நாட்களும் தலா 8,000 பேருக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கருத்தரங்கில் பங்கேற்க, சென்னையில் இருந்து விமானம் வாயிலாக, இன்று காலை 10:00 மணியளவில் கட்சித் தலைவர் விஜய், கோவை வருகிறார்.விமான நிலையத்தில் இருந்து, கட்சியின் பிரசார வாகனம் வாயிலாக, காளப்பட்டி சாலை வழியாக கல்லுாரி மைதானம் அடைகிறார்.பிற்பகல் 3:00 முதல் மாலை 6:30 மணி வரை நடக்கும் கருத்தரங்கில் பங்கேற்கும் விஜய், இரவு லீ மெரிடியன் ஓட்டலில், தங்க உள்ளதாக தெரிகிறது. இரண்டாவது நாள் கருத்தரங்கு முடித்து, விமானம் வாயிலாக சென்னை திரும்புகிறார்.