விளை நிலங்களுக்குள் புகும் காட்டு யானைகள்
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி அருகே வனத்தை ஒட்டிய நரிமுடக்கு பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி அருகே உள்ள நரிமுடக்கு பகுதி, ஆனைமலை புலிகள் காப்பக எல்லையில் அமைந்துள்ளது. இங்கு, வனப்பகுதியை ஒட்டி, தென்னை, காய்கறி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதனால், வனத்துறையினர் அனுமதி பெற்று, விவசாயிகள் பலர் சோலார் மின் வேலியும் அமைத்துள்ளனர். ஆனால், உணவு, தண்ணீர் தேடி வரும் யானைகள், அங்கு முகாமிட்டுள்ளன. அவ்வப்போது, விளைநிலங்களுக்குள் புகும் யானைகள், தென்னை மரங்களின் குருத்துகளை பிடுங்கி ருசிக்கின்றன. வேளாண் பயிர்கள் சேதமடைவதால், விவசாயிகள் செய்வதறியது திணறி வருகின்றனர். காட்டு யானைகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை. அதேநேரம், பாதிப்புக்கு உரிய இழப்பீடு வழங்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'யானைகள், உணவு, தண்ணீர் மற்றும் நிழல் வேண்டி, 500 சதுரகிலோ மீட்டர் துாரம், நாளொன்றில் பயணிக்கும். அதன் அடிப்படையில், காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்திருக்கும். யானைகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி மேற்கொள்ளப்படும். யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகின்றன,' என்றனர்.