மேலும் செய்திகள்
பைக் திருடியவர் கைது
31-Jan-2025
விருத்தாசலம்; விருத்தாசலம் பகுதியில் தொடர் பைக்கில் திருட்டில் ஈடுபட்ட 'பலே' திருடனை போலீசார் கைது செய்தனர். 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அரசு மருத்துவமனை, பஸ் நிலையம், மார்க்கெட் கமிட்டி பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் 20க்கும் மேற்பட்ட பைக்குகள் காணாமல் போனது.பைக் உரிமையாளர்கள் புகார்களின் பேரில், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி (பொறுப்பு), விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, சங்கர் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று சித்தலுார் புறவழிச்சாலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக பைக்கில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர் கருவேப்பிலங்குறிச்சி அடுத்த தேவங்குடி கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் மகன் தங்கதுரை, 30, என்பதும், விருத்தாசலம் பகுதியில், கடந்த ஒரு மாதத்தில் 21 பைக்குகளை திருடியதும் தெரிய வந்தது.இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, தங்கதுரையை கைது செய்தனர். அவரிடம் இருந்த 21 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
விருத்தாசலம் பாலக்கரையில் தினசரி காலை 7:00 மணியளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூலி தொழிலாளிகள் கூடுவர். அங்கிருந்து கட்டடம், பெயிண்டிங் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தினசரி செல்வது வழக்கம். அதேபோல், கட்டட பணிக்கு தங்கதுரை தினசரி பஸ்சில் பாலக்கரை வந்தார். அப்போது, வேலை கிடைக்காத நாட்களில், அரசு மருத்துவமனை, மார்க்கெட் கமிட்டி, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு நடந்து சென்று அங்கு நிற்கும் பைக்குகளை திருடிச் சென்று, தனது சொந்த ஊர் பகுதியில் வசிக்கும் நபர்களுக்கு மலிவு விலையில், பைக்குகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
31-Jan-2025