என்.எல்.சி., வாய்க்கால் வெட்டும் பணி; பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம்
சேத்தியாத்தோப்பு; என்.எல்.சி., 2வது சுரங்க விரிவாக்கத்திற்கு வாய்க்கால் வெட்டும் பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த முத்துகிருஷ்ணாபுரத்தில் கடந்த 2007-08 ஆம் ஆண்டு நெய்வேலி என்.எல்.சி., நிர்வாகம், 2வது சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம், வீடு, மனை கையகப்படுத்தியது. நிலம் ஏக்கருக்கு ரூ.5 லட்சமும், வீட்டு மனைக்கு ரூ.5 ஆயிரம் என இழப்பீடு வழங்கப்பட்டது. 200 குடும்பங்களில் 150 பேருக்கு மாற்று மனை வழங்கிவிட்டு மீதமுள்ள 50 குடும்பங்களுக்கு வழங்கவில்லை.இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் விவசாய சங்க தொழிலாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் நேற்று காலை 10:30 மணியளவில் வாய்க்கால் வெட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். நிலம் கையகப்படுத்திய என்.எல்.சி., நிர்வாகம் தற்போது வழங்கியது போல் சமஇழப்பீடு வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் என்.எல்.சி., நிர்வாகம் அறிவித்த ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வீட்டு மனை வழங்காதவர்ளுக்கு வீட்டு மனை, வாழ்வாதார தொகை, தற்போது கையகப்படுத்திய நிலங்களுக்கு ரூ. 25 லட்சமும், வீட்டுமனைக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வழங்க வேண்டும். கோபாலபுரம், கம்மாபுரம் பகுதிகளில் நிலம் கொடுத்தவர்களுக்கு சம இழப்பீடு வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.வருவாய் துறை மற்றும் என்.என்.சி., அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால், மதியம் 12:00 மணிக்குமேல் பந்தல் அமைத்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.