ரூ.163 கோடியில் சாலை விரிவாக்கம்
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் 163 கோடி ரூபாயில் நடந்து வரும் முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டப் பணிகளை, கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.மாநிலம் முழுவதும் முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலையில், 4.3 கி.மீ., தொலைவிற்கு 46 கோடி ரூபாயில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது.மேலும், சித்தலுார் புறவழிச்சாலையில் இருந்து கருவேப்பிலங்குறிச்சி மார்க்கத்தில், 8.5 கி.மீ., துாரத்திற்கு இருவழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடந்தது.விருத்தாசலம் - தொழுதுார் சாலையில், ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், மதனத்துார் வரை 6.8 கி.மீ., தொலைவிற்கு சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. அதில், விருத்தாசலம் மற்றும் கருவேப்பிலங்குறிச்சி பகுதிகளில் மணிமுக்தாறு மற்றும் வெள்ளாறுகளில் மேம்பாலம் உட்பட 163 கோடி ரூபாயில் சாலை விரிவாக்கப் பணிகள் நடக்கிறது.இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு துறை அமைச்சர் மற்றும் செயலாளர் உத்தரவின்படி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பணிகளின் தரம், உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்த அவர், பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடித்து, பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.அப்போது, கோட்டப்பொறியாளர் அய்யாதுரை, உதவி கோட்டப் பொறியாளர் அறிவுக்களஞ்சியம், உதவி பொறியாளர் தனபாலன் உடனிருந்தனர்.