தீபாவளி தீ விபத்தில் 10 கூரை வீடுகள் சேதம்; 75 பேர் காயம்
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் தீபாவளியன்று ஏற்பட்ட தீ விபத்துக்களில் 75 பேர் காயமடைந்தனர்.நாடு முழுவதும் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். கடலுார் மாவட்டத்தில் 10 தீ விபத்துக்கள் ஏற்பட்டது.இதில் கடலுார் சிப்காட், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், மங்கலம்பேட்டை, வேப்பூர், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் தலா 1, சிதம்பரம் 2, முத்தாண்டிக்குப்பம் 2 என மொத்தம் 10 கூரை வீடுகள் மற்றும் 2 தென்னை மரங்கள் எரிந்து சேதமடைந்தது. அந்தந்த பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். மேலும், மாவட்டம் முழுவதும் பட்டாசு வெடித்ததில் 75 பேர் காயமடைந்தனர். அவர்கள், அந்தந்த பகுதி அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். மாவட்டத்தில் உள்ள 16 தீயணைப்பு நிலையங்களில், 12 தீயணைப்பு நிலையங்களுக்கு தீ விபத்து குறித்த அழைப்புகள் வந்தது. மீதமுள்ள 4 தீயணைப்பு நிலையங்களுக்கு தீ விபத்து குறித்த அழைப்புகள் வரவில்லை.