தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம்: புதிய அரசு நிறைவேற்றித்தருமா?
கடலுார்: தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் திட்டத்தின் கீழ் கடலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் புதிய அரசு விளையாட்டு அரங்குகள் அமைப்பதை தொடர்ந்து செய்ய வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த ஆட்சியில் முதல்வரின் மினிஸ்டேடியம் திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி 234 சட்டசபை தொகுதிகளில் 61 தொகுதிகளில் ஸ்டேடியங்கள் இருப்பது கண்டறியப்பட்டு மீதமுள்ள 173 தொகுதிகளில் மினிஸ்டேடியம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. முதற்கட்டமாக 9 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக 19 தொகுதிகளிலும் மினிஸ்டேடியம் அமைக்கும் பணி துவங்கி நடக்கிறது. பல இடங்களில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவும் கண்டது. தொடர்ந்து மூன்றாம் கட்டமாக 25 தொகுதிகளில் மினிஸ்டேடியம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடலுார் மாவட்டத்தில், இரண்டாம் கட்ட பட்டியலில் அறிவிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி தொகுதியில் வழுதலம்பட்டு கிராமத்தில் மினி ஸ்டேடியம் கட்டுமானப்பணிகள் துவங்கி 40 சதவீத அளவிற்கு நடந்துள்ளது. பண்ருட்டி தொகுதியில் முதலில் தேர்வு செய்யப்பட்ட தகுதியானதாக இல்லாததால் மாற்று இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. மூன்றாம் கட்ட பட்டியலில் அறிவிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் ஸ்ரீஆதிவராகநல்லுார் கிராமத்தில் மினி ஸ்டேடியம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கியது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இத்திட்டம் தொடருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து முன்னாள் விளையாட்டுவீரர்கள் கூறுகையில், 'தொகுதிக்கு ஒரு மினிஸ்டேடியம் திட்டம் அடிப்படையில் இருந்து விளை யாட்டு வீரர்களை உருவாக்குவதற்கான சிறப்பான திட்டம். கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கும் சிறந்த பயிற்சி அளித்து, மாநில மற்றும் தேசிய அளவிலான போ ட்டிகளில் பங்கேற்க உதவியாக அமையும். தற்போது துவங்கியுள்ள பணிகளை முடிப்பதோடு, மாவட்டத்தில் உள்ள தேவையான இடங்களையும் கண்டறிந்து அனைத்து தொகுதிகளிலும் மினிஸ்டேடியம் அமைப்பது விளையாட்டுத்துறையில் தமிழக வீரர்கள் சாதனை தொடர உதவியாக இருக்கும்,' என்றனர்.