சென்டர் மீடியனில் டாரஸ் மோதல் விருத்தாசலத்தில் தொடரும் விபத்து
விருத்தாசலம் ; விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில், சென்டர் மீடியனில் கனரக வானகங்கள் மோதி அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.துாத்துக்குடியில் இருந்து டாரஸ் லாரி, கடலுாருக்கு நிலக்கரி ஏற்றி புறப்பட்டது. எட்டயபுரம் அடுத்த சோழபுரம் அருணாச்சலம் மகன் ஆதித்தியப்பன், 28, என்பவர் ஓட்டி வந்தார். சேலம் - கடலுார் தேசிய நெடுஞ்சாலையில், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் வளாகம் அருகே நேற்று அதிகாலை வந்தபோது, சென்டர் மீடினில் மோதி விபத்துக்குள்ளானது.அதில், லாரியின் முன்பகுதியில் இருந்து பின்பகுதி வரை முழுவதுமாக சென்டர் மீடியனில் சிக்கி உருக்குலைந்தது. இந்த விபத்தில் டிரைவர் ஆதித்தியப்பன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். பலத்த சப்தம் கேட்ட கிராம மக்கள் வந்து, விருத்தாசலம் போலீசார் உதவியுடன் டிரைவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து, மாற்று லாரி மூலம் நிலக்கரி அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.சென்டர் மீடியன் அமைந்துள்ள பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் போதிய வெளிச்சம் மற்றும் எச்சரிக்கை பலகைகள் இல்லாமல் அடிக்கடி விபத்துகள் நிகழ்கிறது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.