பூட்டியே கிடக்கும் அம்மன் கோவில்; அறநிலையத்துறை அலட்சியம்
நடுவீரப்பட்டு ; நடுவீரப்பட்டு அடுத்த மூலக்குப்பத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட திரவுபதியம்மன் கோவிலில் பூஜை நடக்காமல் மூடியே கிடப்பதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர். நடுவீரப்பட்டு அடுத்த மூலக்குப்பத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் மிகவும் பழமையானது.இக்கோவில் நிர்வகிப்பது சம்மந்தமாக இருதரப்பினருக்குமிடையே பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2019 ம் ஆண்டு ஊர்மக்களின் சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் மகாகும்பாபிஷேகம் நடந்தது. மீண்டும் ஊரில் இருதரப்புக்குமிடையே ஏற்பட்ட பிரச்னையில் கடந்த 2022ம் ஆண்டு இக்கோவிலை அறநிலையத்துறை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இதனால் ஊரில் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.இக்கோவில் அறநிலையத்துறை கட்டுபாட்டில் கொண்டு வந்ததிலிருந்து சரிவர பூஜை நடக்காமல் கோவில் பூட்டியே உள்ளது.இந்த ஊரில் உள்ள ஒரே கோவில் இதுமட்டுமே.இந்த கோவிலும் பூட்டியே இருப்பதால் ஊரில் உள்ள ஆன்மிக பக்தர்கள் கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபட முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.அறநிலையத்துறை ஊரில் உள்ள பக்தர்களுக்கு கோவிலை திறக்க அனுமதி வழங்கினால்,அவர்களே பூஜை செய்ய தயாராக உள்ளனர்.ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகள் அதை பற்றி கவலைப்படாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.இதனால் பல லட்சம் செலவு செய்து கட்டப்பட்ட கோவிலில் உள்ள சுவாமிகளுக்கு தினமும் நடக்க வேண்டிய நெய்வேத்ய பூஜை நடக்காமல் உள்ளது.ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து,பூட்டிய கோவிலை திறந்து,தினமும் பூஜை நடக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.