தேனீ வளர்ப்பு திட்டம் துவக்கம்
கிள்ளை: பிச்சாவரம் அலையாத்தி காடுகளில் பழங்குடியின மக்களுக்கு தேனீ வளர்ப்பு திட்டத்தினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் துவக்கி வைத்தார். இது குறித்து அவர் கூறியதாவது: கடலுார் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் வனப்பகுதியில் வாழும் இருளர் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழக வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா மேலாண்மைக்குழு இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. 100 இருளர் குடும்பங்களுக்கு தேனீ வளர்ப்பு மூலம் நிலையான வருமானம் ஈட்டுதல், 8 கட்ட பயிற்சிகள் மூலம் பெண்கள், இளைஞர்கள் மற்றும் மீனவர்களுக்கு திறன்கள் மேம்படுத்தப்படுகிறது. தேன் பதப்படுத்தல், பொதியிடல் மற்றும் விற்பனை செய்யப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் இணைந்த வாழ்வாதார மேம்பாட்டிற்கு வழி வகுக்கும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், தலைமை வனப்பாதுகாவலர் பெரியசாமி, மாவட்ட வன அலுவலர் குருசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.