ஆற்றில் வீசப்பட்ட இரட்டை பெண் குழந்தை சடலம்; கடலுார் கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு
கடலுார்; கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரே, தென்பெண்ணை ஆற்றில் இரட்டை பச்சிளம் பெண் குழந்தைகள் சடலம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் தடுப்பணை அருகே நேற்று காலை ஒரு பச்சிளம் பெண் குழந்தை இறந்த நிலையில் மிதந்தது. தகவலறிந்த ரெட்டிச்சாவடி மற்றும் கடலுார் புதுநகர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் குழந்தை சடலத்தை மீட்டனர். குழந்தை சடலம் அருகே ஒரு கட்டப்பை இருந்தது.அந்த பையை போலீசார் கைப்பற்றிய போது அதிலும் ஒரு பச்சிளம் பெண் குழந்தை இறந்த நிலையில் இருந்தது. இரு குழந்தைகளின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக கடலுார் தலைமை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.இறந்த குழந்தைகளின் கைகளில் கடலுார் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் கட்டப்பட்ட அடையாள பட்டை இருந்தது.மருத்துவமனை பதிவேடுகளை ஆய்வு செய்ததில், காடாம்புலியூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணிற்கு, இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. கடந்த 14ம் தேதி பிறந்த குழந்தைகளில் 15ம் தேதி மாலை ஒரு குழந்தையும், இரவு ஒரு குழந்தையும் அடுத்தடுத்து இறந்தன. குழந்தைகளின் உடலை மருத்துவமனை நிர்வாகம், தந்தையிடம் ஒப்படைத்துள்ளது.தாய்க்கு தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டதால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அவர், குழந்தைகளின் உடலை தென்பெண்ணை ஆற்றில் வீசிவிட்டு, மனைவியை பார்க்கச் சென்றது தெரிய வந்துள்ளது. தந்தையை அழைத்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.