உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பொங்கல் பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல்துறை தீவிரம்! கூடுதலாக 84 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி

பொங்கல் பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல்துறை தீவிரம்! கூடுதலாக 84 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பொங்கல் மற்றும் ஆற்றுத்திருவிழா பாதுகாப்பு பணிகளில் 2000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் இன்று தைப் பொங்கல், நாளை மாட்டுப் பொங்கல், வரும் 16ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை தொடர்ந்து, ஆற்றுதிருவிழாவும் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை மற்றும் ஆற்றுத்திருவிழாக்களில் எவ்வித சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.ஏ.டி.எஸ்.பி.,க்கள் கோடீஸ்வரன், நல்லதுரை, ரகுபதி ஆகியோர் தலைமையில், 9 டி.எஸ்.பி.,க்கள், 33 இன்ஸ்பெக்டர்கள், 231 சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 2000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பொங்கல் திருவிழாவின்போது மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்கள், பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் கிராமங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணி மேற்கொள்கின்றனர். பொங்கல் திருவிழாவின்போது பிரச்னைக்குறிய கிராமங்களில் இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டும், பொங்கல் பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் போக்குவரத்து பாதிக்காமல் பாதுகாப்பு பணி மேற்கொள்கின்றனர். காவல் துறை அதிகாரிகள் வாகனங்களில் ரோந்து பணி மேற்கொள்ளவுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது கடத்தலை தடுக்கும் பொருட்டு மாவட்ட எல்லையில் 8 மதுவிலக்கு சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், கூடுதலாக மாவட்டத்தில் 84 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து வாகன தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆற்றுதிருவிழா அன்று, பொதுமக்கள் அதிகம் கூடும் தென்பெண்ணை ஆறு, தேவனாம்பட்டினம் சில்வர் பீச், சாமியார்பேட்டை கடற்கரை ஆகிய இடங்களில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். பொங்கலன்று மது அருந்திவிட்டு வாகனங்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது வழக்குபதிந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை