நந்தனார் ஆலயத்தில் குருபூஜை விழா
காட்டுமன்னார்கோவில்; காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள மா.ஆதனூர் கிராமத்தில் நந்தனார் குருபூஜை விழா நடந்தது. நந்தனார் ஆன்மிகப் பண்பாட்டு மையம் மற்றும் மகளிர் மன்றம் சார்பில், 63 நாயன்மார்கள் ஒருவரான திருநாளைப்போவார் என்று அழைக்கப்படும் நந்தனாருக்கு, ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில், மா.ஆதனூர் கிராமத்தில், நந்தனார் கோவிலில், குரு பூஜை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, காஞ்சி சங்கரமடம் சார்பில், நந்தனார் ஆலயம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுவதால் கொள்ளிடக்கரையோரத்தில் குருபூஜை விழா நடந்தது. விழாவையொட்டி, சங்கர மடத்தினை சார்ந்த வெங்கட்ராமன் தலைமையில், தர்ம சக்தி சேனை நிறுவனர் பரமகுரு முன்னிலையில் பல்வேறு கிராமங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட பெண்கள் மேலதாளத்துடன் முளைப்பாரி எடுத்து நந்தனார் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக கொள்ளிடக்கரை வரை எடுத்து சென்றனர். தொடர்ந்து நடராஜர் முன்பு பூஜைகள் செய்யப்பட்டு முளைப்பாரிகள் கொள்ளிட ஆற்றில் விடப்பட்டது அதன் பிறகு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு, அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அன்னதானம் நடைபெற்றது. இதில் புல்லாங்குழல் புகழ் மோகன்தாஸ் மற்றும் தேவாரக் கச்சேரிகள் நடந்தன. நிகழ்வில் மதுரை தங்கராஜ், டாக்டர் அன்பு செல்வம், பத்மஸ்ரீ வேலு, அறிவழகன், செந்தில், கோபிநாத், கருப்புசாமி, சிவகுமார், சொர்க்கபுரஆதீனம் மற்றும் ஏராளமான சிவனடியார்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.