உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வன்னியர் சங்க தலைவருக்கு மிரட்டல்; பா.ம.க.,வினர் போராட்டத்தால் பதற்றம்

வன்னியர் சங்க தலைவருக்கு மிரட்டல்; பா.ம.க.,வினர் போராட்டத்தால் பதற்றம்

கடலுார்; புவனகிரியில், வன்னியர் சங்க தலைவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வி.சி., கட்சியினர் பேசியதை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க கோரியும் பா.ம.க.,வினர், பல மாவட்டங்களில் போலீசில் புகார் அளித்து வருவது, பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.கடலுார் மாவட்டம், புவனகிரி அருகே பு.உடையூரில் சமீபத்தில், பா.ம.க., மற்றும் வி.சி., கட்சி நிர்வாகிகளிடையே ஏற்பட்ட மோதலில் பா.ம.க., நிர்வாகி ஒருவர் தாக்கப்பட்டார். புகாரின் பேரில் வி.சி., நிர்வாகிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யக்கோரி, பா.ம.க., மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தலைமையில் மறுநாள் மஞ்சக்கொல்லையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.அப்போது பெண் ஒருவர், வி.சி., கொடிக்கம்பங்களால் ஊரில் பிரச்னை வருகிறது என, பீடத்தை உடைக்க முயன்றார். இதுதொடர்பாக போலீசார் பா.ம.க., நிர்வாகிகள் 300 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.தொடர்ந்து, வி.சி., கொடிக்கம்ப பீடம் சேதப்படுத்தப்பட்டதாக அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில், வன்னியர் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் நிர்வாகிகள் பேசியுள்ளனர்.இது, பா.ம.க., தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்தும், வன்னியர் சங்க தலைவருக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலுார், ஆத்துார், கும்பகோணம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் நிலையங்களில் பா.ம.க.,வினர் மனு அளித்தனர்.மேலும், புவனகிரியில் பா.ம.க., நிர்வாகிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதே போன்று, வி.சி., கொடி கம்பம் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வி.சி. கட்சியினரும் புகார் அளித்துள்ளனர். இதனால், ஏற்கனவே, எதிரும் புதிருமாக உள்ள பா.ம.க., - வி.சி., கட்சியினரிடையே மீண்டும் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டு, பல பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை