49 பட்டாசு கடைகளின் உரிமம் சிதம்பரம் கோட்டத்தில் ரத்து
சிதம்பரம் : சிதம்பரம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 49 பட்டாசு கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. சிதம்பரம் கோட்டத்திற்குட்பட்ட சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 9 வானவெடி விற்பனை நிலையங்கள், 60 பட்டாசு கடைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியகுமட்டியில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் ஒருவர் இறந்தார். அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பட்டாசு கடைகளை சரியான முறையில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது. அதன்பேரில், சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன் குமார், சிதம்பரம் உட்கோட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அதில், உரிமம் புதுப்பிக்காமலும், அரசு வழிகாட்டுதலை பின்பற்றாமல் இருந்த 49 பட்டாசு கடைகளின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.