மழையால் கால்நடைகள் பாதிப்பு அதிகரிப்பு! சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை
சிதம்பரம்: கடலுார் மாவட்டம் முழுவதும் தொடர் மழை காரணமாக கால்நடைகள் நோய் தாக்குதலால் பாதிக்கப்படுவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.'பெஞ்சல்' புயல் காரணமாக, கடலுார் மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக, விட்டு விட்டு, தொடர் மற்றும் கன மழை பெய்தது. இதன் காரணமாக, ஆடு, மாடு மற்றும் கோழிகள் நோய் பாதிப்புக்கு ஆளாகின்றன. உயிரிழப்புகளும் அதிகம். கால்நடைகளை மட்டுமே, குடும்ப ஆதாரமாக வைத்து குடும்பத்தை நடத்தி வரும் கால்நடை வளர்ப்போர் இதனால் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.ஏற்கனவே கால்நடைகளை இழந்து, சோகத்தில் இருக்கும் கால்நடை உரிமையாளர்கள் அரசு இழப்பீடு வழங்கும் என்ற எதிர்பார்ப்பில், கால்நடை மருத்துவர்களிடம் இறப்பு குறித்து தகவல் அளித்தால், மாவட்டத்தின் பெரும்பாலான கால்நடை மருத்துவர்கள், இறந்த கால்நடைகளை பிரேத பரிசோதனை செய்து, செரிமான பிரச்னை, வயிறு பிரச்னை, நிமோனியா, தொண்டை அடைப்பான் உள்ளிட்ட பல்வேறு நோய்களால்தான் இறந்ததாக தெரிவித்துள்ளனர்.கால்நடைகள் இறந்ததால் பாதிக்கப்படும் பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலர் மூலம் நிவாரணம் பெற தாசில்தார் அலுவலகத்திற்கு மனு செய்கின்றனர். ஆனால், மழை காரணமாக இறந்தால் மட்டுமே கால்நடைகளுக்கு இழப்பீடு தர முடியும் என கைவிரிக்கின்றனர்.தற்போது தொடர் மழை காரணமாக கால்நடைகள் நோயால் பாதித்து உயிரிழப்பிற்கு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என, கோரிக்கை வைக்கின்றனர்.மேலும், மாவட்டம் முழுவதும் கால்நடைகள் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால், கால்நடை துறையினர் ஒவ்வொரு பகுதியிலும் முகாமிட்டு, கால்நடை மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.