உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விஜயின் பிரசாரம் சினிமா ஷூட்டிங் தான் அமைச்சர் பன்னீர்செல்வம் கிண்டல்

விஜயின் பிரசாரம் சினிமா ஷூட்டிங் தான் அமைச்சர் பன்னீர்செல்வம் கிண்டல்

கடலுார்: த.வெ.க., தலைவர் விஜயின் பிரசாரம் சினிமா ஷூட்டிங் போலத்தான் என, அமைச்சர் பன்னீர்செல்வம் கிண்டலாக கூறினார். கடலுாரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: என்.எல்.சி., 3வது சுரங்கத் திட்டம் கைவிடப்பட்டதாகவும், 3வது சுரங்கத்திற்கு அவசியமே இல்லை என 3 ஆண்டுகளுக்கு முன்பே பிரச்னை தீர்க்கப்பட்டது. அதுதொடர்பான கோப்புகள் தமிழக அரசிடம் எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் அன்புமணி இரட்டை முகம்கொண்டு பேசுகிறார். ஒரு பக்கம் நிலம் கொடுக்கக் கூடாது என்கிறார். மற்றொரு புறம் தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வேண்டும் என்கிறார். என்.எல்.சி., தொழிற்சங்கத்தில் தங்களுக்கு அங்கீகாரம் வேண்டும் என கேட்கும் அன்புமணி என்.எல்.சி., நிறுவனம் தேவையில்லை எனவும், அதற்கு பூட்டு போடுங்கள் எனவும் பேசுகிறார். வன்னியர் சங்க போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேரின் குடும்பங்களுக்கு பா.ம.க., செய்த சமூக நீதி என்ன. வன்னியர் சங்க போராட்டத்ததில் 16 ஆயிரம் பா.ம.க., வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு காரணமாக அவர்கள் பாஸ்போர்ட் கூட எடுக்க முடியாமல் இருந்தனர். ஆனால், அவர்கள் மீதான வழக்குகளை அப்போதைய முதல்வர் கருணாநிதி வாபஸ் பெற்றார். த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தின்போது மக்கள் கூடுவது வழக்கம் தான். நடிகர் வடிவேலுக்கு கூடாத கூட்டமாக விஜய்க்கு கூடியது. மக்களுக்காக செயல்படும் இயக்கமாக தி.மு.க., உள்ளது. சினிமா பிசினஸ்க்காக உருவாக்கவில்லை. கொரோனா காலத்தில் பல கட்சி தலைவர்கள் மக்களுக்கு உதவினர். அப்போது, விஜய் எங்கே பதுங்கி இருந்தார். விஜயின் பிரசாரமே சினிமா ஷூட்டிங் தான். சினிமாவில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கூட்டுவது போல் இந்த கூட்டம் கூட்டப்பட்டது. ஷூட்டிங்கிற்கு வருவது போல் கூண்டு வாகனத்தில் விஜய் வருகிறார். நடிகர் வடிவேலை வைத்து தி.மு.க., பிரசாரம் செய்தபோது லட்சக்கணக்கில் மக்கள் கூடினர். மரக்கிளைகள், வீடுகளின் மீது எல்லாம் மக்கள் தொங்கிக்கொண்டு வடிவேலுவை பார்த்தனர். சரி நாம் ஜெயித்துவிட்டோம் என்று எண்ணியபோதுதான் 28 ஓட்டுகள் வித்தியாசத்தில் நான் தோல்வி அடைந்தேன். சினிமா வசனங்களில் முதல்வர் ஆகலாம். 2026ல் தான் விஜய் முதல்வர் ஆகப்போவதாக தெரிவித்துள்ளது எப்படி என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ