சாலை சென்டர் மீடியனில் அரளி செடிகள் நடும் பணி
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட நெடுஞ்சாலை சென்டர் மீடியனில், அரளி செடிகள் நடும் பணி நடக்கிறது.கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம், சென்னை - ஜெயங்கொண்டம் மார்க்கத்தில் விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக பஸ், லாரி, வேன் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. நகரில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் 2011ல், கடலுார் - சேலம் மார்க்கத்தில் விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து மணவாளநல்லுார் ஊராட்சி பிரிவு சாலை வரை புறவழிச்சாலை போடப்பட்டது.கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து அரசு பழத்தோட்டம், செராமிக் தொழிற்பேட்டை வழியாக உளுந்துார்பேட்டை மார்க்கத்தில் புதிய புறவழிச்சாலை போடப்பட்டது. இதன் மூலம் நெடுந்துார மற்றும் கனரக வாகனங்கள் நகருக்குள் நுழையாமல் புறவழிச்சாலையில் செல்கின்றன.இந்நிலையில், சேலம் புறவழிச்சாலையில் சித்தலுார் ரவுண்டானாவில் இருந்து ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், வேடப்பர் கோவில் வரை 1 கி.மீ., தொலைவிற்கு 8 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இப்பகுதியில் அமைக்கப்பட்ட சென்டர் மீடியனில் அரளி செடிகள் நடும் பணி தீவிரமாக நடக்கிறது.