நடுவீரப்பட்டு போலீஸ் ஸ்டேஷன் பா.ம.க.,வினர் திடீர் முற்றுகை
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே வழிமறித்து தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்ததை தொடர்ந்து பா.ம.க.,வினர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நடுவீரப்பட்டு அடுத்த பாலுார் நடுத்தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் இளந்தமிழ்,19; இவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு குயிலாப்பாளையத்தில் உள்ள அரிசி கடையில் அரிசி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது பாலுார்,சித்தரசூர் பகுதியை சேர்ந்தவர்களுக்குள் பாலுார் கடைவீதி அருகே தகராறு நடந்தது.அப்போது அந்த வழியாக வந்த இளந்தமிழை பாலுார் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்த மோகன் மகன் வெற்றிவேல்,17; ஒத்தவாட தெருவை சேர்ந்த ராமர் மகன் விஷ்ணுபிரியன்,17; சித்தரசூர் சாலையை சேர்ந்த சுப்பரமணியன் ரவிராஜன்,16;ஆகிய 3 பேரும் வழிமறித்து ஆபாசமாக திட்டி தாக்கினர்.இதில் பலத்த காயமடைந்த இளந்தமிழ் கடலுார் அரசுமருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து வெற்றிவேல்,விஷ்ணுபிரியன்,ரவிராஜன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.பாலுாரை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்ததை அறிந்த கடலுார் பா.ம.க.,வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன்,கிழக்கு மாவட்ட தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில் 50 க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாலை நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தின் முன் கூடி ஒரு தரப்பு மனு மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், எதிர் தரப்பு கொடுத்த மனு மீதும் நடவடிக்கை எடுத்து எதிரிகளை கைது செய்ய வலியுறுத்தினர்.இவர்களுடன் பண்ருட்டி டி.எஸ்.பி.,ராஜா,சப் இன்ஸ்பெக்டர் முகிலரசு பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.