என்.எல்.சி., நிறுவன பணியை தடுத்து நிறுத்தி போராட்டம்
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த கீழ்வளையமாதேவியில் என்.எல்.சி., நிறுவனம் கரி வெட்டும் பணியை கிராம மக்கள் திடீரென தடுத்து நிறுத்தி போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த கீழ்வளையமாதேவியில் நிலம் கொடுத்து பாதிப்பிற்குள்ளான முத்துகிருஷ்ணாபுரம், கோபாலபுரம் கிராம மக்கள் நேற்று காலை 11.10 மணியளவில் ஒன்று திரண்டனர் என்.எல்.சி., கையகப்படுத்திய நிலங்களில் கரிவெட்டும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டம் செய்தனர். போராட்டத்தில், நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் கடந்த 2008 ம் ஆண்டு இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்கு ஏக்கர், ரூ.5 லட்சத்திற்கு கையப்படுத்தியது. குறைவான தொகையில் நிலங்களை கையகப்படுத்திய என்.எல்.சி., மாற்று மனை, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் ஏதும் வழங்கவில்லை. தற்போது மத்திய அரசின் புதிய குடியமர்வு திட்டத்தில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 25 லட்சம், வாழ்வாதாரத் தொகை ரூபாய் 17 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது. மாற்று இடம் வழங்கி வீடு கட்டுவதற்கு பணம் ஒதுக்கி தந்துள்ள என்.எல்.சி., நிறுவனம் அதே போன்று எங்களுக்கு புதிய குடியமர்வு திட்டத்தில் வாழ்வாதாரத் தொகை 17 லட்சம் வழங்க வேண்டும். மேலும் வீட்டு மனைக்கு சென்ட் ஒன்றுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனக் கூறி மண் வெட்டும் இயந்திரத்தை தடுத்து போராட்டம் செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த என்.எல்.சி., அலுவலர் போராட்டம் செய்த மக்களை சமாதானம் செய்து தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக எழுதி என்.எல்.சி., நில எடுப்பு அலுவலகத்தில் கொடுத்து பேச்சுவார்த்தைக்கு நாளை வருமாறு கூறினார். அதனை தொடர்ந்து போராட்டம் செய்த மக்கள் 12:00 மணியளவில் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது