மூதாட்டி பலாத்கார வழக்கு தப்ப முயன்ற ரவுடி சுட்டுபிடிப்பு காவலருக்கு கத்திவெட்டு: பண்ருட்டியில் பரபரப்பு
பண்ருட்டி: பண்ருட்டி அருகே 80 வயது முதாட்டியை பலாத்காரம் செய்த வழக்கில் ரவுடியை போலீசார் அதிரடியாக சுட்டுபிடித்தனர்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவர், நேற்று முன்தினம் அருகில் சவுக்கு தோப்பில் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது, மர்ம நபர், பாலியல் பலாத்காரம் செய்து, அவர் அணிந்திருந்த 4 கிராம் மூக்குத்தியை பறித்துச் சென்றனர். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து, சம்பவம் நடந்த இடம் அருகே கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், மொபைல் போன் பதிவுகள் அடிப்படையில் மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய நபர் மேல்மாம்பட்டு பழைய ஆலை பின்புறம், முந்திரிதோப்பில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், டி.எஸ்.பி., ராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு நேற்று பகல் 11:45 மணிக்கு சென்றனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த சுந்தரவேல், போலீசாரை கண்டு அதிர்ச்சியடைந்தார். காவலர்கள் குபேந்திரன்,34; ஹரிஹரன்,37; ஆகியோர் பிடிக்க முயன்ற போது, மர்ம நபர் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் குபேந்திரனின் வலது கையில் வெட்டினார். உடன், இன்ஸ்பெக்டர் வேலுமணி, துப்பாக்கியை காட்டி சரணடையமாறு எச்சரித்தார். ஆனால், அவர், அதற்கு மறுத்து மற்றொரு காவலர் ஹரிஹரனை வெட்ட முயன்றார். அப்போது, இன்ஸ்பெக்டர் வேலுமணி, மர்ம நபரின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். உடன், காயமடைந்த மர்ம நபர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியிலும், காவலர்கள் குபேந்திரன், ஹரிகரன் பண்ருட்டி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். மர்ம நபரிடம் நடத்திய விசாரணையில், பண்ருட்டி அடுத்த எஸ்.கே.பாளையம், மாரியம்மன் கோவில் தெரு சுப்பையன் மகன் சுந்தரவேல்,25; என்பது தெரிந்தது. இவர், மீது திருச்சி கன்ட்ரோல்மென்ட் போலீஸ் ஸ்டேஷன், கோயம்புத்துார், ஈரோடு, திருவெண்ணைநல்லுார் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் ரவுடி பட்டியல் பராமரிப்பதும் தெரிந்தது. துப்பாக்கி சூடு நடந்த இடத்தை எஸ்.பி.,ஜெயக்குமார் பார்வையிட்டு விசாரணை நடத்தி, காவலர்கள் குபேந்திரன், ஹரிகரனுக்கு ஆறுதல் கூறினார்.