வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம்: மத்திய அரசுக்கு விக்கிரமராஜா கோரிக்கை
கடலுார்; டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூடினால் வரவேற்போம் என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.கடலுாரில் அவர் கூறியதாவது;தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42வது மாநில மாநாடு வரும் மே 5ம் தேதி மதுராந்தகத்தில் நடக்கிறது. பல்வேறு வரிகளால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். லைசென்ஸ் உரிம கட்டணம், வணிக கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே வீட்டு வரி, மின்சார கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், வணிகர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு விடுதலை வேண்டும் என்ற நோக்கில் வணிகர்கள் உரிமை முழக்க மாநாடு நடக்கவுள்ளது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். மாநாட்டில் முதல்வர் பல்வேறு சலுகைகள் அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்.தமிழகத்தில் பாலியல் தொடர்பான வழக்குகளில் 60 நாட்களில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பை மற்றும் குட்கா விற்பனை தேசிய அளவிலான பிரச்னை. இந்த பொருட்களை விற்பனை செய்யும் தொழிலதிபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூடினால் கண்டிப்பாக வரவேற்போம்.டாஸ்மாக் கடை மூடிவிட்டால் அந்த வருமானம் முழுதும் வணிகர்களுக்கு கிடைத்துவிடும். சொத்து வரி ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்த்துவதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்பனை செய்வதால் 10 கோடி வணிகர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். வணிகர்கள், சிறு வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டத்தை மத்திய அரசு இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.