உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்:அதிகாரிகள் அலட்சியத்தால் விவசாயிகள் அவதி

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்:அதிகாரிகள் அலட்சியத்தால் விவசாயிகள் அவதி

விருத்தாசலம்: சேமிப்பு கிடங்குகளில் நெல் மூட்டைகளை அகற்றி, கொள்முதல் நிலையங்களில் இருந்து ஏற்றிச் செல்ல அதிகாரிகள் உத்தரவு தராததால் திறந்தவெளியில் மழையில் நனைந்து வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் சம்பா, சொர்ணவாரி உள்ளிட்ட நெல் அறுவடை காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக விவசாயிகள் சாகுபடி செய்த நெற்பயிர்களை கொள்முதல் செய்வது வழக்கம். மின்வெட்டு, தண்ணீர் பற்றாக்குறை, கூலியாட்கள் தட்டுப்பாடு உட்பட பல்வேறு இயற்கை இடர்பாடுகளை தாண்டி விவசாயத்தை கைவிடாமல் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால், அவற்றை கொள்முதல் செய்வதில் மாவட்ட நிர்வாகம் அக்கறை காட்டுவது இல்லை. மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் சுட்டிக்காட்டியும், கலெக்டர் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது. தற்போது, சொர்ணவாரி நெல் அறுவடை தீவிரமடைந்த நிலையில், மாவட்டம் முழுவதும் 110க்கும் அதிகமாக கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், இவற்றை சேமித்து வைக்கும் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இடம் பற்றாக்குறை காரணமாக, ஆங்காங்கே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்தள்ளன. மேலும், நெல் மூட்டைகள் தேக்கம் காரணமாக விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், திடீர் மழையில் நெல் மணிகள் மழையில் நனைந்து முளைத்து வீணாகும் நிலை ஏற்பட்டது. இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் வெளியானதை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் சேமிப்புக் கிடங்குகளில் இருந்த நெல் மூட்டைகள், மதுரை, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி, நேற்று முன்தினம் வரை, 10 ஆயிரம் டன் நெல் மூட்டைகள், மாவட்ட சேமிப்புக் கிடங்குகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகளை சேமிப்புக் கிடங்குகளுக்கு ஏற்றாமல் காலம் தாழ்த்துகின்றனர். இதன் காரணமாக, கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால் சொர்ணவாரி பட்டத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'மாவட்டம் முழுவதும் 119 இடங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. சேமிப்புக் கிடங்குகளில் இருந்து நெல் மூட்டைகளை அகற்றினாலும், நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து ஏற்றும் உத்தரவு வரப்படவில்லை. இதனால் ஒவ்வொரு நிலையத்திலும் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை மூட்டைகள் தேக்கமடைந்து கிடக்கின்றன. திடீர் மழை மட்டுமல்லாது இயற்கை பேரிடர்களில் இந்த நெல் மூட்டைகள் சேதமடைந்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்க நேரிடும். அதுபோல், கொள்முதல் செய்த மூட்டைகள் அழுகி முளைத்தாலும், அப்படியே அனுப்பி வைக்கப்பட்டு விடும். இதனால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி துர்நாற்றத்துடன் வழங்கப்படும் அபாயம் ஏற்படும். குறிப்பிட்ட கொள்முதல் நிலையங்களை தவிர, மற்ற இடங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் ஏற்படுகிறது. நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு சரிவர பட்டுவாடா செய்யாத இடங்களில் நெல் மூட்டைகள் தேக்கமும், விவசாயிகள் பாதிப்பும் ஆண்டுதோறும் தொடர்கிறது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

kr
செப் 05, 2026 06:21

It’s a shame that government cannot provide closed storage facilities for grains sourced from hardworking farmers. TVK government food minister and CM should focus on this task and ensure that by 2027 August all DPCs in TN have closed and secure godowns. Done waste money on cheap advertising - do real ground changing work and you don’t need to advertise at all.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை