ஸ்டிரிக்ட் ஆபிசர் பொதுமக்கள் விரக்தி
மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள வருவாய் அலுவலகத்தில் தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரி முறையாக அலுவலகத்திற்கு வருவதில்லை, பணிகளை கவனிப்பதில்லை என, ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. அதிகாரி மட்டுமின்றி அடுத்தநிலை அலுவலர்களும் பணிகளில் சுணக்கம் காட்டுவதால், பொதுமக்கள் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சனிக்கிழமையில் அலுவலகத்திற்கு வந்த விவசாயி ஒருவர், வண்டல் மண் எடுக்க, தலைமை அதிகாரியிடம் கையெழுத்து கேட்டார். இன்று சனிக்கிழமை விடுமுறை, ஆதலால் கையெழுத்து போடமுடியாது, திங்களன்று, கடலுார் குறைகேட்பு கூட்டத்திற்கு செல்ல வேண்டியிருக்கும், செவ்வாய்க்கிழமை வாங்க எனக்கூறி அனுப்பியுள்ளார்.ஆனால், அதே அதிகாரி மாலை 3:00 மணி வரை காத்திருந்து, மனை வணிகம் தொடர்பான கோப்பில் கையெழுத்து போட்டு வேலையை முடித்துக்கொடுத்துள்ளார். தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரியின் நடவடிக்கையால் பொதுமக்கள் விரக்தியில் புலம்பி வருகின்றனர்.